பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறப்பு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 75 பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்: போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் ரூ. 394 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி 75 பேருந்துகளை இயக்கி நேற்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. போக்குவரத்து நெரிசல் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கத்தில் 110 ஏக்கர் நிலப் பரப்பில் 86 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காகவும், தென் மாவட்டங்களுக்கு சென்று வரும் பயணிகளின் வசதிகளுக்காகவும் இந்த நவீன பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பேருந்து நிலையத்தின் நுழைவாயில் முன்பு உள்ள ஜிஎஸ்டி சாலையில் மழை வெள்ளம் தேங்கி கடல் போல் காட்சி அளித்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். மழைநீர் கால்வாய்கள் அமைக்காமல் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக தள்ளிப்போனது. இதை தொடர்ந்து, தற்போது ஆக்கப்பூர்வமான பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் திறப்பதற்கு முன்பு சோதனை ஓட்டத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காலை நடத்தினர். விரைவு, மாநகர, ஆம்னி பேருந்துகள் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக, புதிய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தில், அந்தந்த ஊர்களின் பெயர் பலகைகள் முன்பு நிறுத்தப்பட்டன. பேருந்துகள் வந்து வெளியே செல்லும்போது ஏற்படும் இடையூறுகள், நெரிசல், கூடுதல் வசதிகள் குறித்து கண்டக்டர்கள், டிரைவர்களிடம் அதிகாரிகள் கேட்டறிந்தனர். இன்றும் சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டும் பணி நிறைவு பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கும் நிலையில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை திறப்பதற்கான தேதிகள் பலமுறை அறிவிக்கப்பட்டும் திறக்க முடியாமல் போனது. அதற்கு, பேருந்து நிலையத்தின் முன் நுழைவாயிலில் தேங்கியுள்ள மழைநீரே முக்கிய காரணம். தற்போது, மழைநீர் சீராக செல்வதற்கு ஆக்கப்பூர்வமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் மேற்படி பணிகள் முடிந்து விடும். மேலும் இந்த மாத இறுதிக்குள் பேருந்து நிலையத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அவ்வப்போது ஆய்வு செய்த அமைச்சர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

பேருந்துகள் சோதனை ஓட்டம் நடத்துவதற்காக 25 அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும், 25 மினி ஆம்னி பேருந்துகளும், 25 மாநகர புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு நேற்று வந்து நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. இதில், செய்யப்பட வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளுடன் சோதனை நடத்த கடந்த 2 மற்றும் 3ம் தேதி திட்டமிட்டு இருந்தோம். ஆனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மிக்ஜாம் புயலினால் மேற்படி சோதனை ஓட்டம் தள்ளிப்போனது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சோதனை ஓட்டத்தை சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் அன்சுல்மிஸ்ரா ஆய்வு செய்தார். அப்போது அவருடன் போக்குவரத்து துறை மற்றும் சிஎம்டிஏ நிர்வாக அதிகாரிகள், அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

The post பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் திறப்பு கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் 75 பஸ்களை இயக்கி சோதனை ஓட்டம்: போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: