×

வங்கக் கடலில் காற்றழுத்தம் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் நீடித்து வரும் காற்றழுத்தம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை காரணமாகவும் தமிழகத்தில் 25ம் தேதி முதல் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வட இந்திய நிலப்பகுதியில் நீடித்துக் கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர, அடுத்தடுத்த மாநிலங்களில் மழை பொழிவு நீடித்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது வெப்பச் சலன மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதைத் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை மற்றும் அதுனுடன் இணைந்த வெப்பச் சலன மழையும் பெய்யும் சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியை ஒட்டிய வட கிழக்கு வங்கக் கடல் புதிய காற்று சுழற்சி நீடித்துக் கொண்டு இருக்கிறது.
மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தற்போது திசை மாறத் தொடங்கியுள்ளது. அரபிக் கடல் பகுதியில் இருந்து தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்க உள்ளது.

குறிப்பாக 25ம் தேதி முதல் இந்த காற்று கிழக்கு நோக்கி வீசத் தொடங்கும். நான்கு நாட்கள் இது நீடிக்கும். அதன் காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். வெயில் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வெப்ப சலன மழை நேற்று தீவிரமாக பெய்தது. மதியம் கடும் புழுக்கமும், வியர்வையும் இருந்தது. பின்னர் படிப்படியாக மதியத்துக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடங்கி உள் மாவட்டங்களில் மழை பெய்யத்தொடங்கியது. டெல்டாவிலும் மழை பெய்து, கடலோர மாவட்டங்கள் வரையில் பெய்யத் தொடங்கியது. மாலையில் முன்னிரவில் தொடங்கி நள்ளிரவு 11 மணிக்குள் வட கடலோரப் பகுதியில் மழை பெய்யத் ெ தாடங்கியது. இன்றைய நிலவரப்படி, காற்று குளிர்ந்து இரு காற்று இணைந்து மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 25ம் தேதி வங்கக் கடலோரம் காற்று சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிடும். 28ம் தேதி வரை ஒடிசா பகுதியில் நீடித்து தீவிரம் அடைந்து மேற்கு வங்கம், பீகார், சத்தீஷ்கர், நேபாளம் ஒட்டிய பகுதி வழியாக பயணிக்கும். அதன் காரணமாக அந்தபகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்.

அதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு காற்றழுத்த சுழற்சி 28ம் தேதி பகுதி உருவாகி ஒடசாை ஒட்டி கரையைக் கடக்கும். இதற்கிடையே, 25, 26, 27, 28ம் தேதிகளில் மட்டும் தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் மழை நீடிக்கும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும். அதாவது 150மிமீ முதல் 200 மிமீ வரை அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வால்பாறையில் 100 மிமீ வரை இருக்கும். வெப்ப சலன இடி மழை மாலையில் பெய்யும். பொள்ளாச்சி நெகமம் பகுதியில் பெய்யும். கிழக்குப் பகுதியில் வட உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும். 29ம் தேதி மழை குறைந்து ஜூலை 5ம் தேதி வரை லேசாக பெய்யும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் ஓரிரு இடங்களிலும் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையிலும் உயர்ந்து காணப்பட்டது. திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையிலும், ஈரோடு, கரூர், திருநெல்வேலி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக நேற்று, மதுரையில் அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்நிலையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் நேற்று மழை பெய்துள்ளது. இதையடுத்து, இன்று முதல் 28ம் தேதி வரையில் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்படும். அதேநேரத்தில், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருப்பதால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும். ந கரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், மத்திய வங்ககக் கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலின் அனேக இடங்களிலும், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்திலும் இன்று வீசும். 24ம் தேதியில் ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக் கடலின் அனேக பகுதிகள், வடமேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்திலும் வீசும். அதனால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

 

The post வங்கக் கடலில் காற்றழுத்தம் தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bay of Bengal ,Chennai ,North Indian ,Dinakaran ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு