குளச்சலில் 10 நாட்களுக்கு பின் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்

குளச்சல்: குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில்தான் உயர் ரக மீன்களாகிய இறால், புல்லன், கணவாய், சுறா, கேரை போன்ற மீன்கள் கிடைக்கும். கட்டுமரம், வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும். இதில் சாளை, நெத்திலி, வேள மீன்கள் பிடிக்கப்படுகிறது.

தற்போது விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் கிடைத்து வருகிறது. இந்தநிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கடந்த 23 ம் தேதி கரை திரும்பின. கரை திரும்பிய விசைப்படகுகள் குளச்சல் மீன் பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டு உள்ளது. கரை திரும்பிய மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிவிட்டு மறுநாள் சுனாமியில் இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஜனவரி 2 ம் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் தென் தமிழக கடலோர பகுதியில் இன்று ஜனவரி 3 ம் தேதிவரை 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதற்கிடையே கடந்த 4 நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில கட்டுமரங்களே கடலுக்கு சென்றன. அவற்றுள் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை.

இதனால் குளச்சலில் இன்று மீன் வரத்து குறைந்தது.இன்று வானிலை எச்சரிக்கை முடிகிறது. இதையடுத்து நாளை (வியாழக்கிழமை) முதல் விசைப்படகுகள் மீண்டும் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றன. தற்போது படகுகளுக்கு குடிநீர் ஏற்றும் பணி நடந்து வருகிறது. ஆழ்கடலில் காற்று தணிந்தால் மாலை ஐஸ் நிரப்பும் பணி தொடங்கும். நாளை முதல் படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.

The post குளச்சலில் 10 நாட்களுக்கு பின் மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள் appeared first on Dinakaran.

Related Stories: