வேலைவாய்ப்பை அள்ளி தரும் பாலிமர் டெக்னாலஜி படிப்பு

கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் அடங்கிய பாலிமர் டெக்னாலஜி என்னும் ஒரு சிறப்பு பிரிவானது, படிப்பதற்கு ஆர்வமூட்டக்கூடியது மற்றும் நல்ல பணி வாய்ப்புகளையும் கொண்டது. ரப்பர் டெக்னாலஜி, பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பிசின் மற்றும் பூச்சு தொழில்நுட்பம் போன்ற பரவலான அம்சங்களை உள்ளடக்கிய ஒரு படிப்பாக இந்த பாலிமர் டெக்னாலஜி படிப்பு திகழ்கிறது. பல் துலக்கும் பிரஷ், பாத்ரூமில் பயன்படுத்தும் பக்கெட் உள்ளிட்ட சாதாரண பொருட்கள் முதல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், விமானங்கள், செயற்கை கோள்கள், பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட மிகப் பெரிய விஷயங்களில் தயாரிப்புகள் வரை, பாலிமரின் பயன்பாடு மிகவும் பரவலான ஒன்றாகும். படிப்பு அறிமுகம்: இந்திய ரப்பர் ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் ஆதரவுடன், கேரளாவிலுள்ள கொச்சின் பல்கலையால், முதன்முதலாக பாலிமர் சயின்ஸ் மற்றும் ரப்பர் டெக்னாலஜி என்ற படிப்பு தொடங்கப்பட்டது.

அப்போது, பி.எஸ்சி., முடித்த பிறகு மேற்கொள்ளக்கூடிய இரண்டு வருட படிப்பாக அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர், பள்ளிப் படிப்பை முடித்தப்பிறகு மேற்கொள்ளக்கூடிய 4 வருட பி.டெக்., படிப்பாக, AICTE கொள்கையின் மூலம் மாற்றம் செய்யப்பட்டது. இந்த 4 வருட படிப்பில், பாரம்பரிய படிப்புகளான, பொறியியல் கணிதம், மெக்கானிக்ஸ், கிராபிக்ஸ் மற்றும் மேலாண்மை ஆகியவை மட்டுமின்றி, கெமிக்கல் இன்ஜினியரிங், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி, பைபர் டெக்னாலஜி, பெயின்ட் டெக்னாலஜி, பயோமெடிக்கல் அப்ளிகேஷன்ஸ், ஏரோஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் அப்ளிகேஷன்ஸ், பயோடீக்ரடேஷன் ஆப் பாலிமர்ஸ், டயர் டெக்னாலஜி மற்றும் கம்போசைட் டெக்னாலஜி உள்ளிட்ட விஷயங்கள் அடங்கியுள்ளன.

நேரடி அனுபவங்கள்: இப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, நேரடி அனுபவத்தைப் பெற முடியும். உதாரணமாக, CUSAT (Cochin university of science and technology) மாணவர்கள், கடைசி ஒரு செமஸ்டர் முழுவதும், கல்வி நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட தொழில் நிறுவனத்திலோ அல்லது ஏதேனும் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலோ பயிற்சி பெறுவார்கள். மேற்கூறிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் என்ற வகைப்பாட்டில், National chemical laboratory, ISRO, Sree Chitra institute of medical science and technology, Asian paints, Rubber research institute of India, General electric போன்ற நிறுவனங்கள் அடங்கும்.

குறிப்பாக, மாணவர்கள் எந்த நிறுவனத்தில் ப்ராஜெக்ட் பணியை மேற்கொள்கிறார்களோ, அந்த நிறுவனத்திலேயே பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். சேர்க்கை பெறுவது எப்படி: பள்ளிப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றைப் படித்து, தேவையான நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதியிருக்க வேண்டும். மதிப்பெண் கணக்கீட்டில், 50% இயற்பியல் – கணிதம் – வேதியியல் ஆகிய மூன்று பாடங்களின் கூட்டிற்கும், தனியாக 50% கணிதப் பாடத்திற்கு மட்டுமாக பிரித்து கணக்கிடப்படும். பல பொறியியல் கல்வி நிறுவனங்கள், இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க, தனியாக நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன. மேலும், பல பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்கள், பாலிமர் டெக்னாலஜியில், டிப்ளமோ படிப்பையும் வழங்குகின்றன.

The post வேலைவாய்ப்பை அள்ளி தரும் பாலிமர் டெக்னாலஜி படிப்பு appeared first on Dinakaran.

Related Stories: