வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்

சென்னை: நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடக்கிறது. இந்த 40 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது.

ஏப்.19 வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிகளை தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டார். மக்களவை தேர்தல், விளவங்கோடு இடைத்தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்வதால் அதன் பிறகு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு மேல் எந்த வகையிலும் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.

வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகன அனுமதி நாளை மாலையுடன் முடிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் பிரச்சாரம் செய்யக்கூடாது. பிரச்சாரம் ஓய்ந்த உடன் நாளை மாலை 6 மணிக்கு மேல் வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும். தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தவோ அதில் வேட்பாளர்கள் பங்கேற்கவோகூடாது.

இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், திரையரங்குகள் வாயிலாக பரப்புரை செய்யக்கூடாது. வாக்குப்பதிவு நாளுக்கான விதிகளை மீறுவோருக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1284 கோடி மதிப்புள்ள ரொக்கம், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் பிடிபட்ட 1425 கிலோ தங்கம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

The post வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகளை வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: