குஜராத்தில் மத வழிபாட்டுதலத்திற்கு நோட்டீஸ்; போலீஸ் ஸ்டேஷன் சூறை, தீ வைப்பு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசார் காயம்

காந்திநகர்: குஜராத்தில் விதிமீறி கட்டப்பட்ட மத வழிபாட்டு தலத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், ஆவேசமடைந்த சிலர் காவல் நிலையத்தை சூறையாடி தீவைத்தனர். டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசார் காயமடைந்தனர். குஜராத் மாநிலம் ஜுனாகத் பகுதியில் செயல்பட்டு வந்த மத வழிபாட்டு தலம் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட மதப்பிரிவினர், ​மஜேவாடி சவுக்கில் அமைந்துள்ள காவல் நிலையத்தை நேற்றிரவு முற்றுகையிட்டனர். அவர்களை அந்த இடத்தில் இருந்து போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது, ​​அவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். இந்த தாக்குதலில் போலீஸ் டிஎஸ்பி மற்றும் 3 போலீசார் காயமடைந்தனர். அங்கிருந்த போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர். பெரும் பதற்றம் நிலவிய நிலையில், இன்று காலை ​​நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீசார் கூறினர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜூனாகத் பகுதியில் விதிமுறைகளை மீறி வழிபாட்டு தலம் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக கூறி, நகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அடுத்த ஐந்து நாட்களுக்குள், இந்த மத வழிபாட்டுதலம் குறித்த சட்டபூர்வமான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும், இல்லையெனில் இந்த இடம் இடிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நோட்டீஸ் கிடைத்த சில மணி நேரங்களில், அப்பகுதியை சேர்ந்த சிலர் திரண்டு வந்து முழக்கங்களை எழுப்பினர். போலீசார் அவர்களைத் தடுக்க முயன்றபோது, ​​அவர்கள் தாக்குதல் நடத்தினர். வன்முறையில் ஈடுபட்ட சிலரை பிடித்து விசாரித்து வருகிறோம். நிலைமை தற்போது கட்டுக்குள் உள்ளது’ என்று கூறினர்.

The post குஜராத்தில் மத வழிபாட்டுதலத்திற்கு நோட்டீஸ்; போலீஸ் ஸ்டேஷன் சூறை, தீ வைப்பு: டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசார் காயம் appeared first on Dinakaran.

Related Stories: