×

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் தம்பி மீதும் தாக்குதல்: மருத்துவமனையில் திடீர் அனுமதி

மதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார், மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின்போது தாக்கியதில் கடந்த ஜூன் 28ம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய ஐகோர்ட் மதுரை கிளை, மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை செய்து வரும் 8ம் தேதிக்குள் (நாளை) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 2ம் தேதி முதல் திருப்புவனத்தில் காவல் நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தினார். ஜூலை 5ம் தேதி வரை பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை செய்தார்.

இந்த விசாரணையில் அஜித்குமாரின் தாயார் மாலதி, அவரது தம்பி நவீன்குமார் ஆகியோரும் ஆஜராகினர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் ஏடிஎஸ்பி சுகுமாறன் ஆகியோரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். நான்கு நாட்கள் நடந்த விசாரணை முடிந்த நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில், நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தனது விசாரணை அறிக்கையை நாளை சமர்ப்பிப்பார் என தெரிகிறது.

இந்நிலையில், அஜித்குமாரை போலீசார் அடித்து விசாரணை செய்தபோது, அவரது சகோதரர் நவீன் குமாரையும் போலீசார் அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் தாக்கியதால் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, நேற்று மாலை மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நவீன் குமார் திடீரென அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் ஏற்பட்டிருந்த வீக்கம், ரத்தக்கட்டு, மற்றும் விரல் வலிக்கு சிகிச்சை மற்றும் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து நவீன்குமாரின் தாய்மாமா பாலமுருகன் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘விசாரணையின் போது தனிப்படை போலீசார் நவீன் குமாரை லத்தியால் அடித்ததால்தான் பாதத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டுள்ளது. தற்போது விசாரணைக்கு வந்த திருப்புவனம் போலீசாரிடம் நவீன்குமார் எழுத்துப்பூர்வமாக லத்தியால் அடித்த போலீசார் மீது புகார் மனு கொடுத்துள்ளார். தொடர்ந்து கால்களில் வலி, ரத்தக்கட்டு இருந்ததால் சிகிச்சைக்கு சேர்ந்து, ஸ்கேன் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது நல்ல நிலையில் உள்ளார்’’ என்றார். சிகிச்சை முடிந்து, நேற்று மாலையே நவீன்குமார் ஊர் திரும்பி விட்டார். மதுரை அரசு மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும்போது, ‘‘நவீனுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை நடத்தி, பாதிப்பின் முழுமையான முடிவுகளை தெரிவிக்க உரிய டாக்டர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

The post போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமாரின் தம்பி மீதும் தாக்குதல்: மருத்துவமனையில் திடீர் அனுமதி appeared first on Dinakaran.

Tags : on ,Ajith Kumar ,Madurai ,Madapuram temple ,Thiruppuvanam ,Sivaganga district ,Manamadurai Crime Branch ,High Court ,Madurai District ,
× RELATED கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக...