1 கோடி பனை விதைகள் நடும் பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு பனை மர தொழிலாளர் நலவாரியம், ‘கிரீன் நீடா’ சுற்றுச்சூழல் அமைப்பு, நாட்டு நலப்பணி திட்டம் எனும் என்.எஸ்.எஸ். தமிழ்நாடு பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து நாளை (ஞாயிறு) 14 கடலோர மாவட்டங்களில், ஒரு கோடி பனை விதைகளை நட உள்ளன. அதன்படி, ஒரு கோடி பனை விதைகள் நடும் நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக, பனை மர தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் கூறியதாவது: தமிழகத்தில், 15 கோடியாக இருந்த பனை மரங்களின் எண்ணிக்கை, ஐந்து கோடியாக குறைந்துள்ளது.

இதனால், கடல் அரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு என சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. பரப்பளவில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை நாளை (1ம் தேதி) துவங்குகிறோம். அதிகபட்சமாக, ராமநாதபுரம் மாவட்டத்தில், 22 லட்சம் பனை விதைகள் நடப்படும். இப்பணியில், ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்களும், கிரீன் நீடா போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் தன்னார்வலர்களும் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post 1 கோடி பனை விதைகள் நடும் பணி: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: