ஆண்டுக்கு இருபோக சாகுபடி; ஆனைமலையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஆனைமலை: ஆனைமலையில் நிரந்தர அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைமலையில் தென்னைக்கு அடுத்தபடியாக நெல் மற்றும் மானாவாரி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதல் போகம் மற்றும் இரண்டாம் போகம் என, பருவ மழையை பொறுத்து அடுத்தடுத்து நெல் சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை சாகுபடி செய்யும் நெல் குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்பட்டு வெளி மார்க்கெட்டில் குறிப்பிட்ட விலைக்கு விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் ஆனைமலையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததுடன் பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆனைமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் ஒரு பகுதியில், சுமார் 3 ஆண்டுக்கு முன்பு தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது. இரு போக நெல் அறுவடையின்போது மட்டுமே அங்கு நெல் கொள்முதல் நிலையம் செயல்படுகிறது. 2 ஆண்டுகளாக இருமுறை மட்டுமே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பதால், எந்த பயணும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் ஆனைமலை சுற்றுவட்டார பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட முதல்போக நெல்பயிர்கள் தற்போது சில பகுதியில் நன்கு விளைச்சலடைந்துள்ளது. பழைய ஆயக்கட்டு பகுதிக்குட்பட்ட காரப்பட்டி, பெரியணை, பள்ளி விலங்கான், அரியாபுரம், வடக்கலூர் வாய்க்கால் பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. ஓரிரு வாரத்தில் நெல் அறுவடை பணி துவங்க உள்ளது.

இருப்பினும் ஒவ்வாரு முறையும் அறுவடை செய்யப்பட்டு தற்காலிகமாக செயல்படும் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும்போது, நெல்லுக்கான உரிய விலை கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் சில விவசாயிகளுக்கு எழுந்துள்ளது. எனவே, ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நிரந்தரமாக அரசு கொள்முதல் நிலையத்தை உடனே திறக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆனைமலையில், நிரந்தரமாக அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால், அதற்கான நடவடிக்கை இல்லாமல், தற்காலிக கொள்முதல் நிலையமே ஏற்படுத்தப்படுகிறது. எனவே, இடைத்தரகர் இல்லாமல், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் துயரைதுடைக்க ஆனைமலையில் நிரந்தர அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்குண்டான உரிய விலை கூடுதலாக நிர்ணயித்து கொடுக்க வேண்டும்’ என்றனர்.

The post ஆண்டுக்கு இருபோக சாகுபடி; ஆனைமலையில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்: விவசாயிகள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: