சென்னை: தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறையில் மின் கட்டணம் செலுத்துவது ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும், 83 சதவீத கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி, வணிகம், விவசாயம், தொழிற்சாலை என 3.3 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இதில் வீட்டு மின் இணைப்புகள் 2.30 கோடிக்கு மேல் உள்ளது.
இந்த இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான பணிகள் அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதில் வீடுகள் போன்ற சாதாரண மின் இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும், தொழிற்சாலை, வணிக வளாகம் போன்ற உயரழுத்த மின் இணைப்புகளுக்கு மாதம் ஒருமுறையும் மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் கட்டணத்தை நுகர்வோர் பிரிவு அலுவலகங்களில் நேரில் சென்று மட்டுமே செலுத்தும் முறை இருந்தது. தொடர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு மின் கட்டணத்தை இணைய வழியாகவும், டிஜிட்டல் முறைகளிலும் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், மின் கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. சுமார் 83 சதவீத மின் கட்டணம் டிஜிட்டல் முறையில் செலுத்தப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் டிஜிட்டல் பணம் செலுத்துதல் அதிகரித்து வருகிறது. நெட் பேங்கிங், பாரத் பில் பேமண்ட் சிஸ்டம், இ-சேவை மையங்கள், தபால் நிலையங்கள், கட்டண நுழைவாயில்கள், டெபிட்/கிரெடிட் கார்டுகள், வங்கி கவுன்டர்கள் மற்றும் பலவற்றின் மூலம் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதை நாங்கள் எளிதாக்கியுள்ளோம். இந்த வசதிகள் நுகர்வோருக்கு விரிவுபடுத்தப்பட்டதன் மூலம், கட்டணங்களை பெறும் திறன் 99 சதவீதத்தை தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.
குறிப்பாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொழிற்சாலைகள் உயர் அழுத்த நுகர்வோர் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்துகிறார்கள். 2023-24 நிதியாண்டில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டிஜிட்டல் சேனல்கள் மூலம் மின் கட்டணம் செலுத்துவதற்காக ரூ.50,217 கோடி வசூலித்துள்ளது. இது 2022-23ல் வசூலிக்கப்பட்ட ரூ.38,329 கோடியுடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகம்.
மீட்டர் மதிப்பீடு, கட்டணத்தை உறுதி செய்தல், உரிய தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் நினைவூட்டல்கள், மின்வெட்டு பற்றிய அறிவிப்பு ஆகியவற்றுக்கு எஸ்எம்எஸ் அனுப்புகிறோம். ஆண்டுக்கு 33 கோடி எஸ்எம்எஸ்களை அனுப்புகிறோம். வட பிராந்தியத்தில் உள்ள நேரடி சேகரிப்பு மையங்களில் கியூஆர் குறியீடு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்கள் ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க தள்ளுபடிகளை வழங்குகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 83 சதவீதம் செலுத்தப்படுகிறது டிஜிட்டல் முறையில் மின்கட்டணம் செலுத்துவது தமிழ்நாட்டில் அதிகரிப்பு: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.