வாலாஜாபாத் அருகே பாலாற்று பாலம் சீரமைக்கப்படாததால் லாரிகளை சிறைபிடித்து மக்கள் மறியல்: போலீசார் சமரசம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே பாலாற்று பாலம் சீரமைக்கப்படாததால் லாரிகளை சிறைபிடித்து மக்கள் மறியல் செய்தனர். வாலாஜாபாத் ரவுண்டானாவில் இருந்து அவளூர் வரை செல்லும் பாலாற்று தரைப்பாலத்தின் பல்வேறு பகுதிகள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டதால் பலத்த சேதமடைந்தது. இதனால் இவ்வழியாக சென்று வரும் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போக்குவரத்து இன்றி பெரிதும் அவதிப்பட்டனர். அதனால் சேதமான பால பகுதிகளில் ராட்சத குழாய்கள் மூலம் பொதுப்பணி துறையினர் தற்காலிக தரைப்பாலமாக சீரமைத்தனர். இந்நிலையில், சேதமான பால பகுதிகளில் நிரந்தர தீர்வு காணும் பணிகளில் பொதுப்பணி துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாகரல் அருகே நெய்யாடுபாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் சவுடுமண் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆயிரக்கணக்கான கனரக லாரிகள், இந்த தரைப்பாலத்தின் வழியாக பகல் நேரங்களில் வேகமாக சென்று வருகின்றன. இதனால், தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் பலமுறை அவளூர் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்தும், தற்காலிக பாலாற்று தரைப்பாலத்தின் வழியே கனரக லாரிகளை இயக்க கூடாது என்பதை வலியுறுத்தியும், இன்று காலை பாலாற்று தரைப்பாலத்தின் மைய பகுதியில் அவளூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சவுடுமண் ஏற்றி வந்த லாரிகளை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையில் மாகரல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘சேதமடைந்த பாலாற்று பாலம் சீரமைக்கப்படவில்லை. தற்காலிகமாக போடப்பட்ட தரைப்பாலமும் சவுடுமண் ஏற்றி வரும் லாரிகளால் பலத்த சேதமடைந்து வருகிறது. வரும் திங்களன்று பள்ளிகள் திறக்கும் நிலையில், வேகமாக சென்று வரும் சவுடுமண் லாரிகளால் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, இங்கு பாலாற்றின் குறுக்கே செல்லும் 2 பாலங்களையும் உடனடியாக சீரமைக்க வேண்டும். இங்கு லாரி போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்’ என்றனர். இப்பிரச்னைகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணி துறை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதை ஏற்று மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.

The post வாலாஜாபாத் அருகே பாலாற்று பாலம் சீரமைக்கப்படாததால் லாரிகளை சிறைபிடித்து மக்கள் மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.

Related Stories: