அதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டிற்கு வெளிநாடுகளிலிருந்து 36 ஆய்வுக் கட்டுரைகள் உள்பட 1,003 ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்றுள்ளன. தமிழ்க்கடவுள் முருகனின் பெருமைகளை உலகறியும் வகையில் பறைசாற்றிய 15 நபர்களுக்கு முருகனடியார்களின் பெயரில் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட உள்ளது. திண்டுக்கல், பழனி ஆகிய இடங்களில் தங்கும் அறைகள், 3 இடங்களில் உணவருந்தும் கூடங்கள், 10 இடங்களில் உணவு வழங்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
6 நுழைவு வாயில்களுடன் 1,000 வாகனங்கள் நிறுத்தும் வசதியும், 100 இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. இம்மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், முக்கிய பிரமுகர்கள், வெளிநாடுகளிலிருந்து துணை அமைச்சர்கள், மேயர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அறுபடை வீடுகளின் அரங்குகள், புகைப்பட கண்காட்சி, வேல்கோட்டம், 3டி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம், ஆன்மிக இசை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் போன்ற அம்சங்களுடன் ஆன்மிக வரலாற்றில் தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு சிறப்பு சேர்க்கின்ற மாநாடாக, இந்த ஆட்சிக்கு ஒரு மைல்கல்லாக மாநாடு நடத்தப்படும்.
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட 12 அயல்நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். ஆன்மிகத்தில் தமிழ்நாடு அரசிற்கு எந்த தடையும் இல்லை, தமிழை முன்னெடுக்கும் ஆட்சி என்ற இரண்டு பொருட்களை இம் மாநாடு நிறைவு செய்கிறது. ஆன்மிக ஆட்சிக்கு உதாரணமாக திகழும் பொற்கால ஆட்சியாக முதல்வரின் ஆட்சி திகழ்கிறது என்று அனைவரும் மகிழத்தக்க வகையில் முருகன் மாநாடு நடத்தப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
The post பழனி அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு இலச்சினை வெளியீடு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டார் appeared first on Dinakaran.