பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

மதுரை: பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நாளிதழ்களில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும் என, இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் திரைப்பட இயக்குனர் மோகன்ஜி. இவர் பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பாக இவர் மீது பழநி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்து, ‘‘மனுதாரர் வாய்ச்சொல் வீரராக இல்லாமல் எந்த ஒரு தகவலையும் தெரிவிப்பதற்கு முன் உறுதிப்படுத்த வேண்டும். உறுதிப்படுத்தாமல் எந்த தகவலையும் கூறக்கூடாது. உண்மையிலேயே பழநி கோயில் மீது அக்கறை இருந்தால், அங்கு தூய்மைப் பணி மேற்கொள்ளலாம். அல்லது பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இடத்தில் சென்று 10 நாட்கள் சேவை செய்யும் நோக்கில் பணியாற்றலாம்’’ என்றார்.

பின்னர், ‘‘மனுதாரர் பழநி பஞ்சாமிர்தம் குறித்து கருத்து தெரிவித்த சம்பந்தப்பட்ட அதே சமூக வலைத்தளத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிரபல தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ் ஒவ்வொன்றிலும், தமிழகம் முழுவதும் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்டு விளம்பரமாக வெளியிட வேண்டும்’’ என உத்தரவிட்டார். மேலும் பல்வேறு நிபந்தனைகள் விதித்து, முன்ஜாமீன் வழங்கி நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவு பிறப்பித்தார்.

The post பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: