ராட்சத பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதம்: ஊட்டி மலை ரயில் ரத்து; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


மேட்டுப்பாளையம்: தொடர் மழை காரணமாக மண் மற்றும் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததில் தண்டவாளம் சேதமடைந்தது. இதனால் ஊட்டி மலை ரயில் இன்று ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு இன்று காலை 7.10 மணிக்கு 180க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. கல்லாறு ரயில் நிலையத்தில் மலைரயில் நிறுத்தப்பட்டது. குன்னூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அடர்லி அருகே மண் மற்றும் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்தது. அவற்றை அப்புறப்படுத்தும் பணி காலதாமதமாகும் என்பதாலும், மலைரயில் பாதையில் வேறு பகுதிகளில் மண் அல்லது பாறைகள் விழுந்துள்ளதா என்பது குறித்து சோதனை நடத்த இருப்பதாலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி மலை ரயில் ரத்து செய்யப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் திருப்பி அனுப்பப்பட்டது.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதையடுத்து மலைரயிலில் பயணித்த சுற்றுலா பயணிகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்துகளில் ஊட்டி புறப்பட்டு சென்றனர். ஒரு சில சுற்றுலா பயணிகள், தாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தனியார் வாகனங்களில் ஊட்டி புறப்பட்டனர். இதற்கிடையே தண்டவாளத்தில் விழுந்த மண் மற்றும் ராட்சத பாறைகளை அகற்றி சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

The post ராட்சத பாறைகள் விழுந்ததில் தண்டவாளம் சேதம்: ஊட்டி மலை ரயில் ரத்து; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: