*வருவாய்த்துறையினர் அதிரடி
திருப்பூர் : திருப்பூர் ஓடக்காட்டில் செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு முன்பு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக கோயிலுக்கு முன்பு 8 தூண்கள் அமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அந்த மண்ணை குழிக்கு அருகிலேயே கொட்டி வைத்திருந்தனர். குழிக்குள் யாரும் விழுந்து விடாமல் இருப்பதற்காக மண் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயிலுக்கு முன்பு கொட்டி வைத்திருந்த மண்ணை 2 டிராக்டர்களில் ஏற்றி எடுத்து செல்ல முயன்றனர்.
இதை அங்கிருந்தவர்கள் கவனித்து யாரைக் கேட்டு மண் எடுத்துச் செல்கிறீர்கள் என்று கூறி டிராக்டர்களை சிறை பிடித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் வடக்கு போலீசார் விரைந்து சென்றனர். வார்டு கவுன்சிலர் சின்னசாமியும் அங்கு வந்தார்.
விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த ஒருவர், டிராக்டர் மூலமாக மண்ணை அள்ளி திருமுருகன்பூண்டியில் உள்ள தனக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுசென்றதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக 10க்கும் மேற்பட்ட லோடுகள் மண் எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
யாரிடமும் உரிய அனுமதி பெறாமல் மண் எடுத்து சென்றதை தொடர்ந்து 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், வடக்கு தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
