ஊட்டி நகரில் பூத்து குலுங்கிய செர்ரி மலர்கள்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

ஊட்டி : ஊட்டி நகரில் சாலையோரங்களில் பூத்துள்ள செர்ரி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு காணப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல்வேறு மரங்கள் மற்றும் தாவரங்களை ஊட்டிக்கு கொண்டு வந்து பயிரிட்டனர்.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் காலநிலை இங்கும் நிலவுவதால், அந்த நாடுகளில் காணப்படும் மரங்கள், தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் அதிகளவு இங்கு கொண்டு வந்து நடவு செய்யப்பட்டது. இந்த மரங்கள் மற்றும் செடிகளில் அந்தந்த காலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், ஜப்பான் நாட்டின் தேசிய மலரான ‘செர்ரி’ மரங்கள் அதிகளவு நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகிறது.

வசந்த காலத்தை வரவேற்கும் மலர்கள் என்பதால் ஜப்பான் நாட்டில் இந்த மலர் தேசிய மலராக இருந்து வருகிறது. குளிர் அதிகமாக நிலவும் இடங்கள், குறிப்பாக சதுப்பு நிலங்கள் மற்றும் நீரோடைகளின் அருகே இந்த மரங்கள் அதிகளவு காணப்படுகின்றன. நீலகிரி மாவட்டத்தில் பொதுவாக ஆகஸ்ட் மாதங்களில் இந்த மலர்கள் பூக்கும். தொடர்ந்து, 4 மாதம் இந்த மலர்களை காண முடியும். தற்போது, இந்த செர்ரி மலர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூத்துள்ளது.

ஊட்டியிலும் பல்வேறு பகுதியிலும் பூத்துள்ளது. குறிப்பாக, சேரிங்கிராஸ் முதல் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பல இடங்களில் இந்த மரங்களில் தற்போது இளஞ்சிவப்பு நிறுத்தில் இந்த செர்ரி மலர்கள் பூத்துள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

The post ஊட்டி நகரில் பூத்து குலுங்கிய செர்ரி மலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: