நெல்லை – சென்னை இடையே இருமார்க்கத்தில் தினமும் பல ரயில்கள் மற்றும் அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், இயக்கப்படுகின்றன. ஆயினும் தொடர் விடுமுறை நாட்களின் தொடக்க நாளில் சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கும் விடுமுறை முடிந்து நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கும் ஒவ்வொரு முறையும் பஸ் ரயிலில் இடம் கிடைக்காத நிலை அதிகரித்து வருகிறது. இதை பயன்படுத்தி கடைசி நேரத்தில் முன்பதிவு செய்து செல்பவர்களுக்காக ஆம்னி பஸ்களின் கட்டணம் தேவையின் நிலைக்கு ஏற்ப விறுவிறு என உயருகிறது.
சனி, ஞாயிறு விடுமுறை உடன் நேற்று செவ்வாய்க்கிழமை மிலாடி நபி அரசு விடுமுறை வந்ததால் பலர் திங்கட்கிழமை ஒருநாள் கூடுதலாக விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து நெல்லை மாவட்டத்தில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். இவர்கள் நேற்று மாலையிலிருந்து சென்னைக்கு திரும்பி செல்ல தொடங்கினர். ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் எந்த பிரச்னையும் இன்றி தங்கள் ரயில், பஸ்களில் ஏறிச்சென்றனர்.
அதேநேரத்தில் முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் சென்னைக்கு புறப்பட்டவர்கள் பாடு படுதிண்டாட்டமானது. நேற்று பகலிலேயே பெரும்பாலான ஆம்னி பஸ்களில் இருக்கைகள் பதிவு செய்யப்பட்டு விட்டன. அதைத்தொடர்ந்து சில ஆம்னி பஸ்களில் இருந்த குறைந்த அளவிலான படுக்கை வசதி, இருக்கை வசதி டிக்கெட்டுகள் விலை வேகமாக உயர்ந்தது. இணையதளத்தில் டிக்கெட் கிடைக்குமா? என தேடி பார்த்தவர்களுக்கு சில பஸ்களில் படுக்கை வசதி கட்டணம் 3,500 ரூபாயை கடந்து காட்டியது. வந்தே பாரத் ரயிலை விட இரண்டு மடங்கு கட்டணம் உயர்ந்தது. அதே நேரத்தில் சில ஆம்னி பஸ்களில் சீட்டர், செமி ஸ்லீப்பர் டிக்கெட்டுகள் ரூபாய்1500 முதல் 1700 வரை விற்கப்பட்டது. சில பஸ்களில் அந்த டிக்கெட்டுகளும் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டன.
நெல்லை எக்ஸ்பிரஸ், அனந்தபுரி, கன்னியாகுமரி விரைவு ரயில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதுபோல் கோவை, பெங்களூரு செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது. ஆம்னி பஸ்களில் அதன் வசதிக்கு ஏற்ப எந்த சீசனிலும் அதிகபட்ச டிக்கெட் வரன்முறை நிர்ணயிக்க வேண்டும். அதை கண்காணிக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிறப்பு வந்தே பாரத் ரயில்கள்?
தொடர் விடுமுறை நாட்களில் சென்னை செல்வதற்கும் நெல்லை வருவதற்கும் இரவு 10 மணிக்கு மேல் வந்தே பாரத் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 மணிக்கு சென்னை செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்களை இயக்க வேண்டும். ஆம்னி பஸ் கட்டணம் தாறுமாறாக உயரும் போது வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கினால் அதற்குரிய கட்டணத்தில் பயணிகள் இரு மார்க்கத்திலும் செல்ல வசதியாக இருக்கும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
The post நெல்லை-சென்னை ஆம்னி பஸ் கட்டணம் கிடுகிடு உயர்வு: அதிக கட்டணம் இருந்தும் வேகமாக புக் செய்யப்பட்ட இருக்கைகள் appeared first on Dinakaran.