அதிகாரிகள் சுவர் ஏறி உள்ளே வர அவசியம் இல்லை.. ஐ.டி.சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மதுவிலக்குத்துறை தொடர்பான ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்து வரும் ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் என மொத்தம் 40 இடங்களில் இன்று அதிகாலை முதல் ஒன்றிய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக இந்த சோதனை நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த சோதனை அரசியல் பழிவாங்கும் நோக்கில் சோதனை நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் வருமான வரிசோதனை குறித்து தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியது பின்வருமாறு,” வருமான வரி சோதனை என்பது எங்களுக்கு புதிதான ஒன்று அல்ல. இன்று வருமான வரி சோதனை நடைபெறும் வீடுகளில் உள்ளவர்கள் முறையாக வருமான வரியை செலுத்துபவர்கள்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் எனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. எனது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறவில்லை.எனது தம்பி, அவரது நண்பர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடைபெறுகிறது. வருமான வரி சோதனை முழுவதும் நடைபெற்று முடிந்தவுடன் எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்.

எனது தம்பி வீட்டின் சுவரில் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.சுவரில் ஏறிச் சென்று சோதனை மேற்கொண்ட வீடியோ எனக்கு வந்துள்ளது. அதை பற்றி விசாரணை மேற்கொள்ளப்படும். எத்தனை நாட்கள் சோதனை நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு தரப்படும்.சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக்கூடாது என்றும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.எனக்கு வந்த தகவல்படி 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு கேட்காமல் மாநில காவல்துறை எப்படி பாதுகாப்பு வழங்கும்.2006ம் ஆண்டுக்கு பிறகு நானோ, எனது குடும்பத்தினரோ ஒரு சதுர அடி நிலம் கூட வாங்கவில்லை.எனது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என எனக்கு அறிமுகமில்லாதவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது,’என்றார்.

The post அதிகாரிகள் சுவர் ஏறி உள்ளே வர அவசியம் இல்லை.. ஐ.டி.சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தரப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Related Stories: