நோய்களுக்கு நோ சொல்லும் பிரண்டை உணவுகள்…

நம்மைச்சுற்றி இயற்கையாக கிடைக்கும் பல தாவரங்களே நமக்கு பசி போக்கும் உணவாகவும், நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் பயன்படுகின்றன. சாலையோர வேலிகளிலும், புதர்களிலும் படர்ந்திருக்கும் பிரண்டை அந்த விஷயத்தில் என்றுமே கில்லி. பச்சை நிறத்தில் கொடியாக நீண்டு கிடக்கும் இந்த பிரண்டையில் பல்வேறு நோயை விரட்டி அடிக்கும் தன்மை பொதிந்திருக்கிறது. அஜீரணக்கோளாறு, வாயு பிடிப்பு, கை, கால் குடைச்சல் என பல பிரச்னைகளுக்கு தீர்வு தரும் பிரண்டையைக் கொண்டு சட்னி, வற்றல் என பல ஐட்டங்களை செய்து அசத்தலாம்.

பிரண்டை சட்னி

தேவையான பொருட்கள்:

பிரண்டை – 1/4 கிலோ
காய்ந்த மிளகாய் – 4
தேங்காய்த் துருவல் – 1 கப்
பூண்டு – 3
பெருங்காயம் – சிட்டிகை
சின்ன வெங்காயம் -சிட்டிகை
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க
எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்புன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:

பிரண்டையைக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த உடன் பிரண்டையை அதில் போட்டு நன்கு வதக்கவேண்டும். பிரண்டையை நன்கு வதக்கவில்லை என்றால் நாக்கு அரிப்பு எடுத்துவிடும். பிரண்டையை நன்கு வதக்கிய உடன் அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, தேங்காய்த் துருவல் என அனைத்தையும் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும். மிக்சியில் வதக்கிய பொருட்களுடன் உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து அரைத்ததை சேர்த்தால் பிரண்டை சட்னி ரெடி.

பிரண்டை வற்றல்

தேவையான பொருட்கள்:

அரிசி – அரை கிலோ
பிரண்டை – கால் கிலோ (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 3
பச்சை மிளகாய் – 3
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை:

அரிசியைக் கழுவி, தேவையான தண்ணீர் சேர்த்து, குழைய வேக வைத்துக்கொள்ள வேண்டும். பிரண்டை மற்றும் மிளகாயை சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும். வதக்கியவற்றை நன்கு ஆற வைத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். குழைய வேக வைத்துள்ள சோற்றுடன், அரைத்த பிரண்டை கலவையை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்ளவும். இதனை நன்றாக கலந்து, சிறிய நெல்லிக்காய் அளவுக்கு, சிறிது சிறிதாக ஒரு சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து, 4 அல்லது 5 நாட்கள் நன்றாக காயவைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, நன்கு காய்ந்ததும், காய வைத்துள்ள வற்றலைப் போட்டு பொரித்தெடுத்தால் பிரண்டை வற்றல் ரெடி.

பிரண்டை கடையல்

தேவையான பொருட்கள்:

பிரண்டை – கால் கிலோ
துவரம் பருப்பு – 100 கிராம்
சிறிய வெங்காயம் – 4
தக்காளி – 1
பூண்டு – 4
புளி – சிறிதளவு
வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க

எண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1 டீஸ்புன்
சீரகம் – 1 டீஸ்புன்
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:

பிரண்டையைக் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், வெங்காயம், பூண்டு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயப்பொடி, பிரண்டை துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கவும். பிரண்டை நன்கு வதங்க வேண்டும். பிரண்டை நன்கு வதங்கவில்லை என்றால், சாப்பிடும் போது நாக்கு அரிக்கும். இவற்றை நன்கு வதங்கியதும், அதனுடன் தக்காளி, புளி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த கடையலில் சேர்த்தால் பிரண்டை கடையல் ரெடி.

 

The post நோய்களுக்கு நோ சொல்லும் பிரண்டை உணவுகள்… appeared first on Dinakaran.

Related Stories: