என்ஐடி மாணவி மாயம் சித்ரவதை காரணமா? தந்தை கண்ணீர் பேட்டி

திருச்சி: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே ஒன்றிய அரசின் மனித வளத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் என்.ஐ.டி கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த நுதேஷ் குப்தா மகள் ஓஜஸ்வி குப்தா (22) எம்சிஏ பாடப்பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவர் கடந்த செப்.15ம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர், மாயமானார்.

அவர் ‘ஆண் ஆதிக்கம் செலுத்தும் உலகின் சோகமான உண்மை’ என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில், ‘எந்தவொரு பெண்ணும் அழகாக இல்லாவிட்டால், ஆண்கள் தன்னைப் பின்பற்றுவது அல்லது அவரது தலைமையை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து என்ஐடி கல்லூரி பாதுகாவலர்கள் துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவியின் தாய் மற்றும் சகோதரர் திருச்சி வந்து போலீஸ் உதவியுடன் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், மாணவி மாயமானது தொடர்பாக அவரது தந்தை நேற்று மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது: காணாமல் போவதற்கு முன்பு, என் மகள் ஒரு கடிதத்தை எழுதிவிட்டு சென்றுள்ளாள். அதில், கல்லூரியில் கிளாஸ் லீடர் ஆன பிறகு எதிர்கொண்ட மன சித்திரவதை மற்றும் கல்வி அழுத்தத்தைக் குறிப்பிட்டு உள்ளார்.

என மகள் கிளாஸ் லீடர் ஆன பிறகு சக மாணவர்களால் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். என்.ஐ.டி.யில் அட்மிஷன் பெற வேண்டும் என்பது என் மகளின் கனவாக இருந்தது. அவளது கனவும் நிறைவேறியது. ஆனால் அவள் ஒரு மாதத்திற்குள் இன்ஸ்டிடியூட்டில் இருந்து காணாமல் போய்விடுவாள் என்று எங்களுக்குத் தெரியாது. எனது மகளைக் கண்டுபிடிக்க மத்தியப் பிரதேச அரசு மற்றும் இந்தூர் காவல்துறையையும் அணுகியுள்ளேன். இந்தூர் போலீஸ் கமிஷனர் ராகேஷ் குப்தா, திருச்சியில் உள்ள போலீஸ் அதிகாரிகளிடம் பேசி உள்ளார். மகளை கண்டுபிடிக்க இந்தூர் போலீசார் உதவ தயாராக இருப்பதாக கமிஷனர் தெரிவித்தார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post என்ஐடி மாணவி மாயம் சித்ரவதை காரணமா? தந்தை கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: