×

கீழக்கரை அருகே சாலையில் குவித்து வைக்கப்படும் கற்களால் மாணவர்கள் அவதி பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

கீழக்கரை, மார்ச் 6: கீழக்கரை அருகே சாலையை உடைத்து பல வாரங்களாக ஜல்லி கற்களை போட்டு வைத்துள்ளதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமலும், பள்ளி மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் பரிதவிக்கின்றனர். கீழக்கரை அருகே புகழ் பெற்ற மகான் குத்பு செய்யது முகம்மது அப்பா ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்த தர்ஹாவிற்கு செல்லும் சாலை மணல் சாலையாக இருந்ததால் வாகனங்களில் செல்ல முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி இருந்ததை தொடர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் கீழக்கரை நகராட்சி சார்பில் அதன் எல்லையான ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார்சாலை அமைத்தது. தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கிராவல் (செம்மன்) சாலை அமைத்து வாகனங்கள் வந்து சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் அந்த சாலை பழுதடைந்து பள்ளம் மேடாக மாறி இருக்கின்றது. ஆகவே தார்சாலை அமைத்து தரக்கோரி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை தொடர்ந்து கடந்த 6 மாதத்திற்கு முன் திருப்புல்லாணி ஒன்றியத்தில் இந்த சாலையை தார்சாலையாக மாற்றுவதற்கு டென்டர் விடப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு முன் ஜே.சி.பி எந்திரம் முலம் தோண்டப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு முன் சாலையின் ஓரத்தில் ஜல்லி கற்களை கொட்டி வைத்தனர். ஆனால் இன்று வரை எந்த வேலையும் செய்யாமல் அப்படியே போட்டிருப்பதால் கற்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றது. இதனால் வாகனங்கள் மட்டுமின்றி மக்களே நடமாட முடியாமல் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது கீழே விழுந்து சிறு காயங்களுடன் செல்லும் நிலை உள்ளது. இதனால் மாணவிகள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளை ஓட்டி செல்ல முடியாமல் தள்ளியே செல்கின்றனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து தார்சாலை உடனடியாக போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இப்பகுதியை சேர்ந்த சீனி அம்பலம் கூறுகையில், இந்த தர்ஹாவிற்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் ஜாதி மத பேதமில்லாமல் வந்து செல்கின்றனர். இச்சாலையை தோண்டியது மட்டுமில்லாமல் ஓரத்தில் கற்களை போட்டிருப்பதால் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தர்ஹாவிற்கு சின்னமாயாகுளம் வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பக்தர்கள் வருகின்றனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சைக்கிள் மற்றும் டூவீலரில் செல்ல முடியாமலும், மாணவர்களை ஏற்றி செல்லும் கார் மற்றும் வேன்களை அப்பகுயில் ஓட்டி சென்றால் டயர்கள் பஞ்சராகி விடுகிறது. ஆகவே கலெக்டர் இப்பகுதியில் வாழும் மக்கள் மற்றும் தர்ஹாவிற்கு வரும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை உடன் தொடங்கி தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : road ,bottom ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை