×

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் எள் விவசாயத்தில் விவசாயிகள் மும்முரம்

ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 5: ஆர்.எஸ்.மங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் விவசாயிகள் எள்ளு விவசாயத்தில் மும்முரமாக இறங்கியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நெல் விவசாயத்தை அறுவடை செய்து விட்டு எள் விவசாயத்தில் இறங்கி உள்ளனர். பிச்சனாகோட்டை, செங்குடி, பூலாங்குடி, வரவணி, சேத்திடல், அரியான்கோட்டை, பணிதிவயல், இரட்டையூரணி, சவேரியார்பட்டிணம், வல்லமடை, புல்லமடை உள்ளிட்ட சுற்றுபுற கிராமங்களில் தரிசாக இருந்த மற்றும் கதிர் அறுவடை செய்த நிலங்களில் சரியான பருவத்தில் எள் விதைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு நெல் விவசாயம் நன்றாக விளைந்தாலும் இப்பகுதியில் விவசாயிகள் எதிர்பார்த்த உரிய மகசூல் கிடைக்கவில்லை. பூச்சி நோய், நெல் பழம் நோய் போன்ற நோய் தாக்குதல்களில் விளைந்த நெல்லும் விலை குறைவாகவே விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் நம்பியிருப்பது எள் மற்றும் மிளகாய், பருத்தி ஆகிய விவசாயத்தையே. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மிளகாய், பருத்தி போன்ற விவசாயத்திற்கு தண்ணீர் தேவை மற்றும் உரம், மருந்து போன்ற பராமரிப்பு செலவுகளும் அதிகம். ஆனால் எள் விவசாயத்திற்கு அதிகமான செலவு ஏதும் இல்லை. கூடுதல் லாபம் பெறலாம் என்பதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் எள் விவசாயம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

Tags : area ,RS Mangalam ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி