×

புதர்மண்டி கிடக்கும் மயானத்தில் இறந்தவர்கள் உடலை புதைக்க முடியவில்லை பொதுமக்கள் புகார்

சாயல்குடி, மார்ச் 4: முதுகுளத்தூரில் பொது மயானத்தில் சீமை கருவேல மரம், நாணல் செடிகள் அடர்ந்து வளர்ந்தும், குப்பைகள் குவிந்து கிடப்பதாலும் இறந்தவர்களின் உடலை புதைக்க இடமில்லாமல் அவதிப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 3 பொது மயானங்கள் உள்ளது, இங்குள்ள மயானம், எரிமேடை கட்டிடங்கள் போதிய பராமரிப்பு இல்லாததாலும், பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் செய்யாமல் இருப்பதால் கட்டிடங்களின் மேற்கூரை, தரைத்தளம் போன்றவை சேதமடைந்து கிடக்கிறது.

எரிமேடையில் இறந்த உடலை எரிக்க விறகு,டயர், மாட்டு சாணத்தின் எரு, தேங்காய் கொட்டாச்சிகள் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சாம்பல், கம்பி, கரி, எலும்பு போன்ற கழிவு பொருட்கள் தேங்கி கிடக்கிறது. இதனை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் முன்வராததால் எரிமேடையிலேயே தேங்கி கிடக்கிறது.

இறந்த உடலை கொண்டு வரும் பொதுமக்கள் மயானத்தை துப்புறவு செய்யும் நிலை உள்ளது. குப்பைகள் நிறைந்து, அசுத்தமான பொருட்கள் குவிந்து கிடப்பதால் மயானத்தில் இறுதி சடங்குகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மயானத்தில் இருக்கும் மொட்டை போடும் மண்டபம், எரிமேடைக்கு செல்ல அமைக்கப்பட்டுள்ள சாலை போன்றவை சேதமடைந்து கிடக்கிறது. மயானங்களில் குப்பை கழிவுகள், உடைந்த மதுபாட்டில் துகள்கள், சீமைகருவேல மரச்செடிகள், நாணல் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

Tags : public ,burial ground ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...