×

மதுரை-பரமக்குடி நான்கு வழிசாலையில் இருபக்கமும் அதிகளவில் மரங்களை நடவேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்

பரமக்குடி, மார்ச் 3:  மதுரை-பரமக்குடி நான்கு வழிசாலையின் இருபுறமும் அதிகளவில் மரங்களை நடவு செய்யது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு நிழல் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நான்கு வழிச்சாலை பணிகளுக்காக அதிகளவில் மரங்களை வெட்டியதால் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.என்எச் 49 என்பது கொச்சின்-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை உள்ள 76 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை உள்ள 39 கி.மீ. தூரம் இருவழிச்சாலையாகவும் மாற்ற ரூ.937 கோடி ரூபாய் செலவில் 2014ல் பணிகள் முழுவீச்சில் தொடங்கியது.மதுரையில் இருந்து பரமக்குடி வரை 9 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. தற்போது நான்கு வழிசாலை பணிகள் 90 % பணிகள் நிறைவடைந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி, ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்காக 60 மீட்டர் அகலத்தில் நிலங்கள் கையகபடுத்தபட்டது.

இந்த நிலையில் 60 மீட்டர் அகலம் கொண்ட நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காக பழமையான பல ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி, இயற்கையைப் பெருமளவு அழித்தனர். 100 ஆண்டு பழமையான மூன்று லட்சம் வளர்ந்த மரங்கள் (தென்னை, பனை, புளி, தேக்கு) வெட்டி சாய்த்தனர். சாலை விரிவாக்கப் பணியால் பாசனக் குளங்கள் மூடியதால், விவசாயமும் விவசாயிகளும் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். பொருளாதார வளர்ச்சிக்குச் சாலைகள் விரிவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. ஆனால், அதை எப்படிச் செயல்படுத்துகிறோம் என்பதில்தான் சிக்கல் உள்ளது. இந்த இடத்தில் மனிதனுக்காகச் சாலையா அல்லது சாலைக்காக மனிதனா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது. எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல் சுற்றுச்சூழலைச் சீரழித்து, லட்சக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, நூற்றுக்கணக்கான பாசனக் குளங்களை அழித்து மதுரை-ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. குறிப்பாக புன்னிய தலமான ராமேஸ்வரத்திற்கு தினசரி ஆயிரக்கணக்கில் வடமாநிலத்தவர்கள் வந்து செல்கின்றனர்.

மூன்று லட்சம் மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட நிலையில், இதுவரை சாலையின் இருபுறமும் ஒரு மரம் கூட நடவில்லை. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ள நிலையில் மர நிழல்கள் இல்லாததால் கடந்த மாதம் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற கார் பரமக்குடி அருகே தீப்பிடித்து எரிந்தது. அதேபோல் பல வாகனங்கள் பழுதாகி நடுவழியில் நின்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பயணிப்போர் என பலதரப்பினரும் சிரமப்படுகின்றனர். வாகனங்களில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய ஒதுங்குவதற்கு கூட நிழல்கள் இன்றி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். சாலை பணிகள் 90 % முடிவடைந்துள்ள நிலையில் ஒருமரத்தை கூட தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவில்லை. எனவே மதுரை-பரமக்குடி நான்கு வழிசாலையின் இருபுறமும் நிழல் அளிக்க கூடிய மரங்களை நடவு செய்ய மத்திய, மாநில அரசுகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Paramakudi ,Madurai ,
× RELATED சாலையோர மின்கம்பங்களை சேதப்படுத்தும் மர்ம நபர்கள்