×

பயிர் இன்சூரன்ஸ் வழங்காமல் இழுத்தடிப்பு விவசாயிகள் கொந்தளிப்பு

சிவகங்கை, மார்ச் 3: சிவகங்கை மாவட்டத்தில் குறைவான இழப்பீடு அறிவிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இதுவரை இழப்பீடு வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில், கடந்த ஆறு ஆண்டுகளாக போதிய மழையின்மை, காலம் தவறிய பருவமழை உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. 2018-19ம் ஆண்டில் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 335 ஏக்கரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. 85ஆயிரத்து 624விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். போதிய மழையின்றி வறட்சியால் அனைத்துப்பயிர்களும் முழுமையாக கருகின.மாவட்டம் முழுவதும் மொத்தமுள்ள 520 வருவாய் கிராமங்களில் 184 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நூறு சதவீத இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 153வருவாய் கிராமங்களுக்கு 25சதவீதமும், எஞ்சிய 187வருவாய் கிராமங்களுக்கு மிகக்குறைவான இழப்பீடும் அறிவிக்கப்பட்டது.இதன்படியே இழப்பீடு வழங்கப்பட்டது. இந்நிலையில் 25சதவீதத்திற்கும் குறைவான இழப்பீடு அறிவிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களுக்கு உண்மையான பாதிப்பு ஏற்பட்ட அளவில் நூறு சதவீத இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது விவசாயிகளை கடுமையாக பாதிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. அனைத்து பகுதிக்கும் ஒரே இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.இதுகுறித்து ஆய்வு செய்து கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் இழுபறி நீடிக்கிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மாவட்டம் முழுவதும் ஒரே மாதிரியாக நூறு சதவீதம் முற்றிலும் விளையாமல் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், 12 சதவீதம், 14 சதவீதம், 21 சதவீதம் என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு அளவில் மிகக்குறைவாக இழப்பீடு நிர்ணயம் செய்தனர். இதனால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஒரே மாதிரி பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வெவ்வேறு அளவீட்டில் இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்து அனைவருக்கும் நூறு சதவீத இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், பல மாதங்களாகியும் இது குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. இழப்பீடு வழங்கலில் தற்போதயை நிலை குறித்து தெரிவிக்க வேண்டும். விரைந்து இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் கணக்கீட்டு முறையை மாற்ற வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை