×

அம்மா உணவகத்திலிருந்து சமையல் பொருட்களை அபேஸ் செய்யும் ஊழியர்கள்

சேலம், மார்ச் 3:  சேலம் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் இருந்து ஊழியர்கள் பொருட்களை அபேஸ் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் மலிவு விலையில் உணவு சாப்பிடுவதற்காக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2013ம் ஆண்டு அம்மா உணவகங்கள் கொண்டுவந்தார். அரசின் உதவியுடன் செயல்படும் இந்த உணவங்களில், மிகவும் குறைந்த விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  இதனால் இங்கு வந்து சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் உணவு பொருட்களின் விலை, தொழிலாளர்கள் சம்பளம் போன்றவை அதிகமாக உள்ளது. இதனால் ஒரு சில அம்மா உணவங்கள் தவிர, பெரும்பாலான  உணவகங்கள் நஷ்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் சேலத்தில் அரசு மருத்துவமனையிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

இது நோயாளிகள், உறவினர்கள், பார்வையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த உணவகத்தில் சரியாக சமைப்பதில்லை என்றும், பொருட்களை ஊழியர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை ஏழை, எளிய மக்களே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களின் தேவைக்குரிய உணவுகள், இந்த உணவகத்தில் கிடைப்பதில்லை. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் சமையல் பொருட்களை பங்கிட்டு எடுத்துச் செல்வதை, சில  நேரங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. எனவே, அதிகாரிகள் இதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Abbey ,Mom's Restaurant ,
× RELATED திருவள்ளூர் அருகே மூதாட்டியிடம் செயின் அபேஸ்: மர்ம நபர்களுக்கு வலை