×

அபிராமத்திலிருந்து முதுகுளத்தூர் கிராம பகுதிக்கு டவுன் பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சாயல்குடி, பிப். 28: அபிராமம் முதல் நெடியமாணிக்கம், மணலூர் வழியாக முதுகுளத்தூர் வரை உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம வழித்தடத்தில் புதிய தார்ச்சாலை அமைத்து, அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கமுதி அருகே அபிராமம் வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி நத்தம், கண்ணத்தான், மேலக்கொடுமலூர், ஆனைச்சேரி, தட்டனேந்தல், நெடியமாணிக்கம், மணலூர், வைத்தியனேந்தல், கீரனூர், செல்வநாயகபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான கிராமங்கள் முதுகுளத்தூர் வரை உள்ளன. இப்பகுதி கிராமமக்கள் அத்திவாசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி போன்றவை பெற அபிராமம் அல்லது முதுகுளத்தூருக்கு வந்து செல்ல வேண்டும். விவசாயம் முதன்மை தொழிலாக இருந்தாலும், இப்பகுதி கிராம மக்கள் பெரும்பான்மையானோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இப்பகுதிக்கு தரமான சாலை வசதி மற்றும் போக்குவரத்து வசதியில்லாததால் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பல துயரங்களை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அபிராமம்-பார்த்திபனூர் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் நத்தம், நெடியமாணிக்கம் சாலை புதியதாக போடப்பட்டது.ஆனால் சாலை முழுமையாக போடவில்லை. புதிய மேம்பாலம் கட்டும் பணி தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் குண்டும், குழியுமான சாலை, இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேலமரத்தால் இடையூறு ஏற்படுவதால், ஆட்டோக்களில் கூட சென்று வரமுடியவில்லை.மேலும் இப்பகுதியை சேர்ந்த நூற்றிக்கும் மேற்பட்ட மாணவர்கள் அபிராமம், முதுகுளத்தூர், கமுதி மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பள்ளி நேரத்தில் சென்று வர பஸ் வசதியில்லாமல் சிரமப்பட்டு சென்று, வருவதாக கூறுகின்றனர். இப்பகுதியில் இயக்கப்படும் ஒரே ஒரு தனியார் மினி பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் பணம் செலவழித்து, லோடு வேன், இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே அபிராமம் முதல் முதுகுளத்தூர் வரையுள்ள சுற்றியுள்ள கிராமங்களுக்கு அரசு டவுன்பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Mudukulathur ,
× RELATED முதுகுளத்தூர் அருகே போதை வஸ்துகள் இல்லாத முன்மாதிரி கிராமம்