×

முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியில் மாசிகளரி பாரிவேட்டை கொண்டாட்டம்

சாயல்குடி, பிப். 27: முதுகுளத்தூர், சாயல்குடி பகுதியிலுள்ள கோயில்களில் மாசிகளரி, பாரிவேட்டை திருவிழா கொண்டாடப்பட்டது. கோயில்களில் நூற்றுக்கணக்கில் ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.  மாசி களரி பாரிவேட்டை திருவிழாவையொட்டி முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பூங்குளத்தான் அய்யனார், மாடசாமி மற்றும் கோயில் வளாகத்திலுள்ள 41 சாமி சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. நள்ளிரவு கோயிலில் சேவல், ஆடுகள் பலியிட்டு, காவு கொடுத்தல் பூஜைகள் நடந்தது. பிறகு சாமி ஆடுதல், பேய் விரட்டுதல் நடந்தது.அதிகாலையில் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். காலையில் மாவிளக்கு எடுத்தல், பொங்கலிட்டு, கிடா வெட்டுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

இதனை போன்று கீழச்சாக்குளம் அருகே உள்ள முனியன்கோயில் விலக்கு தர்மமுனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டி, அரிசியுடன் கலந்த பயறு, தேங்காய் சாதத்துடன் பொது அன்னதானம் நடந்தது.இதனை போன்று கீரனூர் இருளப்பசாமி, சாயல்குடி அருகே உள்ள கூரான்கோட்டை முனீஸ்வரர் கோயில், மேலக்கிடாரம் பனையடியான், மாடப்பசாமி கோயில்களில் நள்ளிரவு காவு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடலாடி அருகே உள்ள சாத்தங்குடி வேதாளத்துமுனீஸ்வரர், பாப்பாகுளம் குருத்தடி முனீஸ்வரர், எம்.கரிசல்குளம் நொண்டிகருப்பணச்சாமி, சமத்துவபுரம் வனப்பேச்சியம்மன், மூக்கையூர் இருளப்பசாமி, கோவிலாங்குளம் திருக்காலுடையார், இளஞ்செம்பூர் இருளாயிஅம்மன் கோயில் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கோயில்களில் மாரிகளரி, பாரிவேட்டை திருவிழா கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ஆடுகள், சேவல், கோழி பலியிடப்பட்டு, நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

Tags : Celebration ,Masikalari Parivate ,Mudukulathur ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...