×

ஆறு மாதமாக காவிரி குடிநீர் விநியோகம் நிறுத்தம் டி.எம்.கோட்டை மக்கள் அவதி

சாயல்குடி, பிப். 27: சாயல்குடி அருகே டி.எம்.கோட்டை பஞ்சாயத்திற்கு ஆறுமாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் வராததால் கடும் அவதிப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், டி.எம்.கோட்டை கிராமத்தில் 450 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளும், அரசு மேல்நிலைப்பள்ளயில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் படித்து வருகின்றனர்.
கிராமத்திலுள்ள மேல்நிலை, கீழ்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு சாயல்குடி, பெருநாழி வழித்தட குழாயிலிருந்து பிரித்து, காவிரி கூட்டுகுடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக காவிரி கூட்டுக்குடிநீர் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆங்காங்கே குழாய்கள் பராமரிப்பின்றியும், உடைக்கப்பட்டும் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருவதாக கிராமமக்கள் புகார் கூறுகின்றனர்.இதுகுறித்து டி.எம்.கோட்டை பெண்கள் கூறும்போது, ‘ஆறு மாதமாக காவிரிகூட்டு குடிநீர் வருவது கிடையாது. இதனால் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவி வருகிறது. இந்தாண்டு நல்லமழை பெய்தது. ஆனால் ஊரணியில் நடந்த மணல் கொள்ளையால் தண்ணீர் தேங்க வழியில்லாமல் போனது. கிராம ஊரணிகள் வறண்டு கிடக்கிறது. கண்மாயில் கிடக்கும் தண்ணீரும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் குளிப்பதற்குகூட வழியில்லாத நிலை உள்ளது.

தற்போது ஊரணியில் அமைக்கப்பட்டுள்ள பழைய கிணற்று தண்ணீரை பயன்படுத்தி வருகிறோம். வாகனங்களில் விற்கப்படும் தண்ணீரை குடம் ஒன்று ரூ.10க்கு வாங்கி குடித்து வருகிறோம்.விவசாய வேலை, நூறு நாள் வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு செல்வதால், வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டுவேலைகளை மட்டுமே பார்க்க நேரம் கிடைக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், முதியவர்கள் காலை, மாலையில் கிணற்றில் தண்ணீர் அள்ளி வருகின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் கிணறு முதல் வீடு வரை தள்ளுவண்டியை தள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை போன்று பள்ளிகளில் தண்ணீரின்றி மாணவர்கள் கழிவரையை கூட பயன்படுத்த முடியாமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாயல்குடி, பெருநாழி வழித்தடத்தில் செல்லக்கூடிய காவிரி கூட்டுக்குடிநீர் குழாயிலிருந்து புதிய குழாய் இணைப்பு வழங்கி, அதிக குதிரைதிறன் கொண்ட மோட்டார் பொருத்தி, கிராமத்திலுள்ள நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்றி கிராமத்திற்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Cauvery ,
× RELATED தமிழ்நாட்டுக்கு 2.5 டிஎம்சி காவிரி நீரை...