×

நெல் கொள்முதல் நிலையத்தில் வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்

சிவகங்கை, பிப்.25:  நெல் கொள்முதல் நிலையங்களில் வசூல் செய்த பணத்தை விவசாயிகளிடமே திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் சுமார் 95 சதவீத அறுவடைப்பணி முடிந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் விவசாயிகளிடம் 40 கி.கி கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.760க்கு பெறப்படுகிறது. நெல்லை சுத்தம் செய்வதற்கென ஒரு மூட்டைக்கு ரூ.32முதல் ரூ.40வரை வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்வதற்கென அரசு சார்பில் இயந்திரம் வழங்கப்பட்டும் சுத்தம் செய்ய கூடுதலாக பணம் வசூல் செய்கின்றனர். நெல் மூட்டையை எடை வைக்கவும் வசூல் செய்யப்படுகிறது. சுத்தம் செய்ய, எடை போட, மூட்டையை அடுக்கி வைக்க, ஏற்றி இறக்க, மூட்டை தைக்க என அரசு சார்பில் ஒரு மூட்டைக்கு ரூ.26 வழங்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு பணம் வழங்கப்படுவதை மறைத்து ஒவ்வொரு மூட்டைக்கும் விவசாயிகளிடம் வசூல் நடக்கிறது. இதுபோல் நெல் கொண்டு வந்து கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்பவர்கள் விவசாயிகள் தான் என்பதற்கு ஆதாரமாக விவசாய நிலங்களின் பத்தொன்று(10/1) கொண்டு வந்து அந்த எண்ணை பதிவு செய்ய வேண்டும். ஆனால் அதுபோல் செய்வதில்லை. இதனால் விவசாயிகளின் போர்வையில் வியாபாரிகள் கொள்முதல் நிலையங்களை ஆக்கிரமித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் மாவட்ட செலாளர் வீரபாண்டி கூறியதாவது, அரசு பணம் வழங்குவதை மறைத்து அந்தப்பணத்தை விட கூடுதலாக விவசாயிகளிடம் வசூல் நடக்கிறது. ராமநாதபுரம மாவட்டத்தில் இவ்வாறு வசூல் செய்த பணத்தை விவசாயிகளிடமே திரும்ப ஒப்படைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதுபோல் இங்கும் செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு விரைவாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்தியது குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து வசூலில் ஈடுபடும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : paddy purchasing center ,
× RELATED 250 மாணவ, மாணவிகள் பங்கேற்பு அரியலூர்...