×

ஆற்று படுகைகளில் இரவு,பகலாக மணல் திருட்டு குறைந்தது நிலத்தடி நீர்மட்டம்

சாயல்குடி, பிப்.11: கடலாடி, முதுகுளத்தூர் பகுதி ஆற்றுப்படுகைகளில் இரவு,பகலாக மணல் கொள்ளை நடந்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்களில் ஒரே நீர் ஆதாரமாக விளங்குவது மலட்டாறு ஆகும். இங்கு தண்ணீர் புரண்டோடி பல வருடங்கள் ஆகிவிட்டதால் ஆறு வறண்டும், கருவேல மரங்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இந்த ஆண்டு பெய்த கன மழைக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடி வந்தது. இதனால் நல்ல மணல் வளம் உள்ளது. இப்பகுதியில் அரசு மணல் குவாரி இல்லாததால், கட்டுமான பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் மணல் கொள்ளையர்கள் வருவாய் துறை, காவல்துறை துணையோடு இரவு,பகலாக மணல் அள்ளி கடத்தி வருகின்றனர். கூரான்கோட்டை, ஆப்பனூர், மங்களம், கிடாத்திருக்கை கிராமங்களின் எல்லைக்கு உட்பட்ட மலட்டாறு ஆற்றுப்படுகைகளில் அரசு விதிமுறைகளை மீறி, எவ்வித அனுமதியின்றி இரவு,பகலாக மணல் அள்ளி டிராக்டர்களில் கடத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் 5 ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீராதாரங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு வரும் கோடைகாலத்தில் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது. எனவே மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘‘கடலாடி அருகே கொம்பூதி பாலம் முதல் ஆப்பனூர், கிடாத்திருக்கை வரையிலான ஆற்றுப்பகுதியில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை டிராக்டர்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. மலட்டாறு எல்கையில் கடலாடி, கோவிலாங்குளம், பேரையூர் ஆகிய காவல் நிலையங்களின் எல்லையும், கடலாடி, முதுகுளத்தூர் தாலுகா வருவாய் எல்லையும் வருகிறது. இதனால் போலீசாரும், வருவாய் துறையினரும் கண்டுகொள்வதில்லை. விதிமுறைகளை மீறி பெரும் ஆழத்திற்கு மணல் அள்ளுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவதுடன், விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஆப்பனூர் முதல் கிடாத்திருக்கை வரையிலும் பருத்தி, மிளகாய் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. மணல் கடத்தலால் விவசாய நிலங்கள், பயிர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாயத்துகளின் சார்பில் அமைக்கப்பட்டு போர்வெல் மோட்டார் அறையை சேதப்படுத்தி, மின்சாதன பொருட்கள், மோட்டார்களையும் திருடி சென்றுவிடுகின்றனர்.

மேலும் மணல் அள்ளிக் கொண்டு குடியிருப்பு பகுதிகளில் மின்னல் வேகத்தில் டிராக்டரை ஓட்டி வருவதால் குழந்தைகள், முதியவர்கள் கோழி, ஆடு போன்ற கால்நடைகள் கிராமங்களில் நடமாட முடியவில்லை. விபத்து அபாயம் உள்ளது. பெரும்பாலான வாகனங்களுக்கு நம்பர் பிளேட் கூட இருப்பதில்லை. மணல் கொள்ளையால் ஆற்றில் மணல் வளம் குறைந்து, மழை பெய்யும் காலத்தில் பொட்டல் தரையால் மழை தண்ணீர் தேங்காமல் வீணாக கடலில் போய் கலந்து விடுகிறது. இதனால் மழை பெய்தவுடன் விவசாய பணிகளை துவங்கினாலும் கூட, போதிய தண்ணீரின்றி விவசாயம் ஆண்டுதோறும் பொய்த்து வருகிறது.சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு பெய்த கனமழைக்கு காட்டுவெள்ளம் கரைபுரண்டு ஓடி ஓரளவு மணல் வளம் பெருகியுள்ளது. தொடர் மணல் கொள்ளையால் ஆற்றின் மணல் வளம், விவசாயம் பாதிக்கும் அபாயம் இருப்பதால் மணல் திருட்டை ஒழிக்க கலெக்டர், எஸ்.பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுமுறையில் எஸ்.பி.,டி.எஸ்.பி.

எஸ்.பி வருண்குமார், முதுகுளத்தூர் டி.எஸ்.பி ராஜேஷ் ஆகியோர் பொறுப்பேற்றதி் இருந்து இப்பகுதியில் ஓரளவு மணல் கொள்ளை நிறுத்தப்பட்டிருந்தது. சில மாமூல் போலீசாரும் அடக்கி வாசித்தனர். இந்நிலையில் எஸ்.பி வருண்குமார் பயிற்சிக்கும், டி.எஸ்.பி ராஜேஷ் விடுமுறையில் சென்று விட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இப்பகுதியில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது.

Tags : river basins ,
× RELATED தாமிரபரணி, காவிரி, பாலாறு உட்பட 17...