×

கிருஷ்ணகிரி அருகே பொது வழிப்பாதையை மீட்கக்கோரி மக்கள் மனு

கிருஷ்ணகிரி, பிப்.11: கிருஷ்ணகிரி அடுத்த வேட்டியம்பட்டி ஏரிக்கரை பாறைக்கொட்டாயை சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகளுடன் வந்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், அகசிப்பள்ளி பஞ்சாயத்து பாறைக்கொட்டாயில் 17 குடும்பங்கள் பட்டா நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களது வீடுகளுக்கு செல்ல 4.5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கடந்த 20 ஆண்டாக பொது வழிப்பாதையாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, வேலி அமைத்து அடைத்துவிட்டனர். இதனால், 17 குடும்பத்தினரும் சாலையை பயன்படுத்த வழியில்லாமல் உள்ளனர். இதுகுறித்து கேட்டால் மிரட்டுகின்றனர். எனவே, பொது வழிப்பாதையை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்தனர்.

இதேபோல், அஞ்செட்டி தாலுகா கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிட மக்கள் மனு அளித்தனர். அதில், 75 குடும்பத்தினர் கோட்டையூர் கிராமத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு வீட்டுமனை வழங்க அரசால் நிலம் கையப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் வீடு கட்ட முடியாமல் ஓடை புறம்போக்கில் வசித்து வருகிறோம். எனவே எங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி அடுத்த எலுமிச்சங்கிரி பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த 2 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை காலை முதல் நள்ளிரவு வரை பெரும் இரைச்சலுடன் இயங்கி வருவதால், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் உள்பட அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தொழிற்சாலை இரைச்சலால சரிவரபடிக்க முடியவில்லை. இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களால் கிராம சாலைகளும் பழுதடைந்துவிட்டது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, இந்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வேப்பனஹள்ளி அருகே உள்ள பூதிமுட்லு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள்கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி ஒன்றியம் பூதிமுட்லு எம்ஜிஆர் நகரில் ஊர்நத்தம் என்ற இடத்தில் 60 வீட்டுமனைகள் உள்ளன. இதில் 12 வீட்டுமனைகளுக்கு மட்டும் கடந்த 10 ஆண்டிற்கு முன்பு பட்டா வழங்கப்பட்டன. மீதமுள்ள வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கவில்லை. பட்டா கேட்டு பலமுறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பட்டா இல்லாமல் 48 குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். எனவே, எங்கள் கிராமத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூளகிரியில் செயல்பட்டு வரும் தனியார்  பேட்டரி நிறுவன தொழிலாளர்கள், சங்க தலைவர் மணிகண்டன், செயலாளர் எல்லப்பன்  தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்தினருடன் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் மனு  அளித்தனர். இதையடுத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், கம்பெனி  நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி, முதல்கட்டமாக 2 பேரை பணியில்  சேர்ப்பதாகவும், மற்றவர்களை விரைவில் சேர்க்கப்படுவதாக தெரிவித்தனர்.  இதுகுறித்து கம்பெனி நிர்வாகத்திடம் வரும் 13ம் தேதி பேச்சுவார்த்தை  நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : restoration ,Krishnagiri ,
× RELATED அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் மாதம்...