×

காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார பணிகள் தீவிரம்

சாயல்குடி, பிப். 7:  கடலாடி கிராம பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமாக உள்ளதாக, நேற்று முன்தினம் தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து வட்டார மருத்துவ குழுவினர் கிராமங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலாடி பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சளியுடன் கூடிய காய்ச்சல் பரவி வருவதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமங்களில் தெருக்களில் ஓடும் கழிவுநீர் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசிந்து சாலையோரங்களில் பெருகி கிடக்கும் தண்ணீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாயத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் மாதக்கணக்கில் தேங்கி கிடக்கும் சுகாதாரமற்ற தண்ணீருடன், புதிய தண்ணீர் ஏற்பட்டு வழங்கப்படுகிறது. இதனை குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பனி சீசன் துவங்கியுள்ளதால் சீதோசண நிலை மாறி மலேரியா, டைபாய்டு காய்ச்சல் மற்றும் வறட்டு இருமல், சளியுடன் கூடிய காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள கடலாடி, சிக்கல், சாயல்குடி பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து கடலாடி வட்டார சுகாதார குழுவினர் மாரந்தை, ஓரிவயல், கிடாத்திருக்கை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீடுகளுக்கு சென்று கொசு புழு ஒழித்தல், தண்ணீரில் கிரிமி நாசினி தெளித்தல், கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தினர். பஞ்சாயத்து பணியாளர்கள் மூலம் கிராமங்களில் கிடந்த குப்பைகள், கழிவுநீர் அகற்றப்பட்டது, பள்ளி, கோயில், குடிநீர் பிடிக்கும் இடங்கள், ஊரணி போன்ற நீர்நிலைகள், அனைத்து தெருக்களிலும் குளோரின் கிரிமி நாசினி பொடி தூவப்பட்டது. பஞ்சாயத்துகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் கிடந்த பழைய தண்ணீர் வெளியேற்றப்பட்டு, குளோரின் மருந்து கலந்து புதிய தண்ணீர் ஏற்றப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை சுகாதார பணிகள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் நடந்து வருவதாகவும், தொடந்து நடைபெறும் எனவும் சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை