×

கமுதி பகுதியில் காய்கறி மகசூல் இருந்தும் விலையில்லை கவலையில் விவசாயிகள்

கமுதி, பிப்.4:  கமுதி பகுதியில் காய்கறி விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். கமுதியை சுற்றியுள்ள கிராமங்களான இடைச்சியூரணி, பெருமாள் தேவன்பட்டி, அம்மன் பட்டி, மூலக்கரைப்பட்டி, குண்டுகுளம், உலகநடை ஆகிய கிராமங்களில் சுரைக்காய், பீர்க்கன் காய், பாவற்காய், பூசணிக்காய், கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, கோவக்காய், அதலைக்காய் ஆகிய காய்கறிகள் அதிகளவில் விளைந்துள்ளது. விவசாயிகள் இதனை கமுதிக்கு கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்கின்றனர். அவர்கள் குறைந்த விலைக்கு எடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது பற்றி குண்டுகுளம் விவசாயி காளியம்மாள் கூறும்போது, கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கமுதி பகுதியில் மழையில்லாததால் சரியான விளைச்சல் இல்லை. ஆனால் இந்த வருடம் நல்ல மழை பெய்ததால் காய்கறிகள் நன்றாக விளைந்துள்ளது. ஆனால் போதிய விலையில்லாததால் மிகவும் கவலையாக உள்ளது. விளைந்த காய்கறிகளை வாகனங்கள் மூலம் கமுதிக்கு கொண்டு வருகிறோம்.

அதற்கு அதிக செலவாகிறது. ஆனால் ஒரு சுரக்காயை ரூ.3க்கு எங்களிடம் வாங்குகிறார்கள். மேலும் பீர்க்கன்காய் ஒரு கிலோ ரூ.8க்கும், பாவற்காய் ஒரு கிலோ ரூ.10க்கும் வாங்குகிறார்கள். நாங்களும் வேறு வழியில்லாமல் கொடுக்க வேண்டியுள்ளது. கமுதியில் உள்ள உழவர் சந்தை செயல்படாமல் உள்ளது. உழவர் சந்தை செயல்பட்டால், நாங்கள் இங்கு நல்ல விலைக்கு கொடுத்து விடுவோம் என்று கூறினார். பல லட்சக்கணக்கான மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கமுதி-உழவர் சந்தை வருடக்கணக்கில் செயல்படாமல் உள்ளது. இது செயல்பட்டால் விவசாயிகள் மொத்த வியாபாரிகளை நம்பாமல், உழவர் சந்தையில் காய்கறிகளை கொடுத்து நஷ்டமில்லாமல் லாபம் பெறுவர். எனவே கமுதியில் மீண்டும் உழவர் சந்தை செயல்பட வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kamuthi ,
× RELATED 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு!: கமுதி,...