×

வீடு தளத்திற்கு விவசாய நிலத்திலுள்ள மண்ணை எடுக்க அனுமதிக்க வேண்டும் பொதுமக்கள் வருவாய் துறைக்கு கோரிக்கை

சாயல்குடி, பிப்.4:  கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வீடு தரைத்தளம் கட்டுமானத்தில் நிரப்ப தேவைப்படும் வடிமண் அடித்துள்ள கொள்ள வருவாய் துறையினர் அனுமதியளிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடுகள் இல்லாத மற்றும் குடிசை வீடுகளில் வசிப்போருக்கு மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 70 மதிப்பீட்டில் வீடும், ரூ.12 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவறையும் கட்டிக்கொடுக்கப்படுகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சொந்த இடம் வைத்திருப்பவர்கள் உதவிபெறும் தகுதியின் அடிப்படையில் 30 சதுரமீட்டர் முதல் 90 சதுர மீட்டர் வரை வீடுகள் கட்டிக்கொள்ளலாம். வீடு கட்டுவதற்கு யூனியன் நிர்வாகம் 104 சிமென்ட் மூட்டைகள், 320 கிலோ முறுக்கு கம்பிகளை வழங்குகிறது. சிமென்ட் மூட்டைகள், கம்பிகளுக்கு ஆகும் செலவு தொகையை பயனாளிகளின் தொகையில் பிடித்தம் செய்யப்பட்டு 3 நிலைகளில் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும்.

கடலாடி, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் பெரும்பாலானோர் விவசாயம், விவசாய கூலி வேலை, நூறுநாள் வேலை, கட்டிட கூலி வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதனால் வீடு கட்டிக்கொள்ளும் அளவில் அவர்களிடம் போதிய பணம் கையிருப்பு இருப்பதில்லை. மணல் தட்டுப்பாடு, கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் இலவச வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளை பெற்றாலும் கூட, அரசு வழங்கும் நிதி பற்றாக்குறையால் கட்ட முடியாமல் கிடப்பில் போட்டு விட்டனர். சிலர் வீடுகட்ட நிர்வாக அனுமதி பெற்று கிடப்பில் போட்டு விட்டனர்.

இந்நிலையில் இந்தாண்டு விவசாயம் நன்றாக வந்ததாலும், கூடுதலாக தேவைப்படும் பணத்திற்கு வெளியில் கடன் வாங்கி கிடப்பில் போடப்பட்ட வீடுகளை கட்டி வருகின்றனர். வீட்டு தரைத்தளம் பணிகள் முடிந்தவுடன் வடிமண் அடித்து, அதன்மேல் கட்டுமானம் கட்ட வேண்டும். ஆனால் கடலாடி, முதுகுளத்தூர் பகுதியில் வடிமண் அடிக்க வருவாய் துறையினர் அனுமதி வழங்குவது கிடையாது. இதனால் ஒரு லோடு  கிராவல் மண் ரூ.20 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கி அடிப்பதால் கூடுதல் செலவு ஏற்பட்டு கடன் சுமையால் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.இதுபோன்று அரசு திட்டம் அல்லாத சொந்த வீடு கட்டும் பொதுமக்களும் தரைத்தளத்திற்கு மண் அடிக்க முடியாமல் அவதிப்படுவதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து கடலாடி ஒன்றியத்தில் வீடு கட்டுபவர்கள் கூறும்போது, வீடு கட்டுமானத்தின் போது தரைத்தளம் பணி நிறைவடைந்தவுடன், அதில் வடிமண்போட்டு, தண்ணீர் ஊற்றி கட்டுமானம் அமைப்பது வழக்கம். இதற்காக கண்மாய், குளம், விவசாய நிலத்திலுள்ள வடிமண்ணை டிராக்டர்களில் அடித்து கொள்ள, கிராம நிர்வாக அலுவலரிடம் வீட்டின் ஆவணங்களுடன் விண்ணப்பித்து, அவர் மூலம் வருவாய்துறையிடம் உரிய அனுமதி பெற்று, காவல்துறைக்கு ஒரு அனுமதி கடிதம் நகல் கொடுத்து விட்டு மண் அடித்துகொள்வது வழக்கம். இதனால் செலவு குறைவு. வீட்டின் தரைத்தள கட்டுமானத்தின் உறுதிதன்மையும் உறுதியாக இருக்கும்.

ஆனால் கடலாடி தாலுகாவில் கடந்த ஓராண்டாக வடிமண் அடித்து கொள்ள அனுமதி வழங்குவது கிடையாது. இதனால் இரண்டு மடங்கு பணம் செலவு செய்து கிராவல் மண் அடிக்கும் நிலை உள்ளது. கிராவல் மண்ணில்  சிறிய அளவிலான கற்கள் கிடைப்பதால் ஓரிரு ஆண்டுகளில் தரைத்தளம் சேதமடைந்து விடுகிறது. எனவே குறைந்த செலவில் உறுதிதன்மையை வழங்கக் கூடிய வடிமண் அடித்துகொள்ள கலெக்டர் அனுமதி வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Department of Public Revenue ,home site ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை