×

சந்தைபேட்டை எதிரே கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு தொல்லை அதிகரிப்பு

கமுதி, பிப்.4:  கமுதி சந்தைப்பேட்டை எதிரே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்ய வேண்டுமென தமுமுக சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். கமுதியில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை சந்தை நடப்பது வழக்கம். சுற்றுவட்டாரத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து காய்கறிகள், பழங்கள்,மீன், கருவாடு, பலசரக்கு பொருட்கள் வாங்கி செல்வார்கள். இப்படி ஏராளமான மக்கள் வந்து செல்லும் சந்தைபேட்டையின் எதிரே சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது.

சந்தையில் சூடான பலகாரங்களான பஜ்ஜி, வடை, மிக்சர், சேவு, இனிப்பு பொருட்கள் இந்த கழிவுநீர் அருகே தான் செய்ய வேண்டிய நிலையில் வியாபாரிகள் உள்ளனர். மேலும் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுவரும் பாதிப்படைந்து வருகிறது. சுவரின் பின்புறம் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் எந்த நேரமும் இடிந்து விழுமோ என்று குடியிருப்புவாசிகள் அச்சத்தில் உள்ளனர். பள்ளி செல்லும் மாணவ,மாணவியரும் இதனை தினமும் கடந்து தான் செல்கின்றனர். கொசுக்கள் உற்பத்தியாகி, கொடிய நோய்களின் பிறப்பிடமாகவும் உள்ளது. எனவே இதனை சரி செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முகம்மது ஹனிபா, நகர செயலாளர் சேக் முகம்மது, ஆகியோர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை