×

இரண்டு வருடத்தில் சேதமடைந்த குண்டும், குழியுமான ஏனாதி சாலை 10 கிராம மக்கள் அவதி

சாயல்குடி, ஜன.31:  முதுகுளத்தூர் சாலையிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் 10க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர்-கடலாடி சாலையிலிருந்து பிரிந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கை செல்ல சாலை உள்ளது. இச்சாலை ஏனாதி, தேவர்புரம், கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை, எஸ்.பி. பட்டி, கூவர்கூட்டம், இறைச்சிக்குளம், சித்திரங்குடி, இலந்தைகுளம், கள்ளிக்குளம், பேரையூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதியில் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு மழை காலங்களில்  பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். ஏனாதியில் பிரசித்திப்பெற்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். முதுகுளத்தூர்-கடலாடி சாலையிலிருந்து பிரிந்து செல்லும் விலக்கு ரோடு ஏனாதி வரையிலான சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இப்பகுதிகளில் இருக்கும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து கடலாடி மற்றும் முதுகுளத்தூருக்கு மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாணவர்களும், அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை உள்ளிட்ட அனைத்திற்கும் செல்ல பொதுமக்கள் இச்சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இச்சாலை வழித்தடத்தில் செல்லும் ஒரே ஒரு அரசு நகர பேருந்தும் அடிக்கடி இச்சாலையில் பழுதாகி நிற்பதால் அன்றைய தினம் இவ்வழியில் எந்தவொரு இதர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் அவசர சிகிச்சைகளுக்கு ஆம்புலன்ஸ் செல்ல இச்சாலையை பயன்படுத்த முடியாமல் ஆமை வேகத்தில் செல்லும் அவலநிலை உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ல்  ஏனாதி முதல் கிடாத்திருக்கை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரதமர் கிராமச் சாலை மேம்பாட்டு திட்டத்தின் புதிய சாலை அமைக்கப்பட்டது. சாலை முறையாக போடப்படாததால் பள்ளம் மேடாக இருந்தது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட புதிய பாலத்தில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் இப்பகுதியில் நல்ல மழை பெய்தது. இதனால் புதிதாக போடப்பட்ட இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் விபத்து அபாயம் உள்ளது.

சாலையோரம் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படாததால் வளைவுகளில் வேகமாக வரும் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இச்சாலையை அமைத்த ஒப்பந்த நிறுவனம் 5 வருடம் இச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும். ஆனால் ஒப்பந்த நிறுவனமும், அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் சாலை கேட்பாரற்று கிடக்கிறது. எனவே சாலையை மராமத்து செய்து வழித்தடங்களை சீரமைக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aenadi Road ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை