கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரி அருகே வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு டாக்டர் செல்லக்குமார் எம்பியிடம் ஆசிரியர்கள் மற்றும் பிடிஏ நிர்வாகிகள் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் காயத்ரி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ், ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயணன், ஆய்வக உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் டாக்டர் செல்லகுமார் எம்பியிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் கே.பூசாரிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2018-19ம் கல்வி ஆண்டில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி, ஆங்கிலவழி கல்வியில் 287 மாணவர்கள் படித்தனர். 2019-20ம் கல்வி ஆண்டில் தமிழ், ஆங்கில வழியில் 270 பேர் படித்து வருகின்றனர். மாணவர்கள் அமர்ந்து படிக்க 10 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், தற்போது 8 வகுப்பறைகள் மட்டுமே உள்ளதால், அறிவியல் ஆய்வகத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், 1500 நூல்களை கொண்ட நூலகம் உள்ளது. புத்தகங்களை வைக்க போதிய அறைகள் இல்லாததால் தலைமை ஆசிரியர் அறையில் வைத்து பயன்படுத்தப்படுகிறது.
பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த தொகை ₹2 லட்சம் அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொது தேர்வில் இந்த பள்ளி தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது. எனவே, மாணவர்களின் வசதிக்காக 3 வகுப்பறை கட்டிடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கி, கூடுதல் வகுப்பறை அமைத்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனு குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக செல்லகுமார் எம்பி தெரிவித்தார்.