×

பரமக்குடியில் தொடரும் ராக்கிங்,சாதி மோதலை தடுக்க மாணவர்களுக்கு கவுன்சலிங் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

பரமக்குடி, ஜன.23:  பரமக்குடியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ராக்கிங் கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவதால், கவுன்சலிங் அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில்  உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே ராக்கிங் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்தக் கல்வியாண்டில் மட்டும்  சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதல்கள் மற்றும் ராக்கிங் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சில மோதல்களில் காவல் நிலையங்களில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பரமக்குடி சுற்றுவட்டார தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பிளேடு, கத்தி உள்ளிட்ட சிறிய ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருவது, மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதேபோல் கடந்தாண்டு ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள்  ஆயுதங்களுடன் சண்டையிட்டு தாக்கி கொண்டனர். இந்த நிலையில் பரமக்குடியை சேர்ந்த  10ம் வகுப்பு மாணவரை, சில தினங்களுக்கு முன்பு பிளஸ்2 மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து சக மாணவி ஒருவரை கேலி செய்ய கூறியுள்ளனர்.

ஆனால் 10ம் வகுப்பு மாணவர் மறுத்ததால், நான்கு பேரும் சேர்ந்து தாக்கினர். இதில் 10ம் வகுப்பு மாணவருக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட பிளஸ்2 மாணவர்கள் மீது பள்ளி நிர்வாகம் எந்தவொரு  நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டினர். இந்நிலையில் மாணவியை கேலி செய்ய மறுத்த மாணவனை ராக்கிங் செய்து தாக்கிய நான்கு மாணவர்கள் மீது, நகர் போலீசார்  மாணவனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக  வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யபட்டதால் நான்கு மாணவர்களையும் ஒரு வாரம் சஸ்பென்ட் செய்திருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். எனவே இனிவரும் காலங்களில் மாணவர்கள் ராக்கிங் செய்வது, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளாமல் இருக்க போதுமான ஒழுக்க நெறிமுறைகள் குறித்த கவுன்சலிங் வழங்க பள்ளிகல்வி துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Counseling community activists ,Paramakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்