×

ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு நேரத்திற்கு வராத நகர பேருந்துகள் சுற்றுலா பயணிகள் கடும் அவதி

ராமேஸ்வரம், ஜன.14:  ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்காக ரயில் நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் நகர் பேருந்துகள் குறித்த நேரத்தில் வந்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகளும், பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் உட்பட குடும்பத்துடன் தமிழகத்தின் பெரும்பாலான பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பெரும்பாலும் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். குழந்தைகள் வயதானவர்களுடன் வரும் பயணிகளுக்கு நன்கு வசதியாக இருப்பதுடன், ரயில் கட்டணமும் குறைவு என்பதால் இவர்கள் ரயிலையே தேர்வு செய்கின்றனர். நீண்ட தூரத்திலிருந்து ரயிலில் பயணித்து வரும் பக்தர்களுக்கு ரயில் நிலையத்தில் இருந்து நகருக்குள் செல்வதற்கு போதிய அளவிற்கு நகர் பேருந்துகள் இயக்கப்படுவதிலை. ரயில் வரும் நேரத்தில் இயக்கப்படும் சில அரசு நகர் பேருந்துகளும் குறித்த நேரத்திற்கு வந்து செல்வதில்லை. இதனால் ரயிலில் வந்திறங்கும் பயணிகள் நடந்து அல்லது ஆட்டோவில் மட்டுமே செல்லும் நிலை உள்ளது.

ராமேஸ்வரம் நகர் பகுதியில் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாத சுவாமி கோயில், அக்னி தீர்த்த கடற்கரை, ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பல இடங்களுக்கு நகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதால் அரசு போக்குவரத்து கழக நகர் பேருந்துகள் மட்டுமே இப்பகுதியில் இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு பேருந்துகள் இயக்குவது என்பது மாறி போக்குவரத்து கழக நிர்வாக வசதிக்கேற்ப பேருந்துகளை இயக்கும் நிலை தற்போது உருவாகியுள்ளது. ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு அதிகாலை 4.20 மணி முதல் இரவு 10 மணி வரை வெளியூர்களில் இருந்து நாள்தோறும் ரயில்கள் வந்து செல்கிறது. இதுபோல் வெளிமாநிலங்களில் இருந்தும் நீண்டதூர வாராந்திர விரைவு ரயில்கள் வருகிறது. ரயில் வரும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதுவும் அனைத்து ரயில்களுக்கும் இந்த வசதி கிடையாது.

இந்நிலையில் ரயில் வந்து சேரும் குறித்த நேரத்திற்கு நகர் பேருந்துகள் ரயில் நிலையம் வருவதில்லை என்றும், ரயிலில் வந்த பயணிகள் அனைவரும் ஆட்டோவிலும், நடந்தும் சென்றபிறகே பேருந்து வந்து செல்லும் நிலை உள்ளது என்றும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் ரயிலில் பயணித்து வரும் பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோவில் செல்வதும், உடமைகளை தோளில் சுமந்து கொண்டு நடந்து செல்வதும் வழக்கமாகி வருகிறது. ராமேஸ்வரம் என்றாலே ஆன்மிக யாத்திரையும், சுற்றுலாவும்தான். இதை வைத்துத்தான் இங்கு வசிப்போரின் பெரும்பாலோரின் வருவாய் வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை மையப்படுத்தி ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பல்வேறு விதமான பிரச்னைகளை வரும்போதெல்லாம் சந்தித்து வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வதற்கென்றே இங்கு தமிழக சுற்றுலா துறை நிர்வாகமும் உள்ளது. ஆனால் பெயருக்கு பொங்கல் விழா, உலக சுற்றுலா தினம் என ஆண்டுக்கு பெயரளவில் இரண்டு விழாக்கள் நடத்துவதுடன் சரி, வேறு எதிலும் அக்கறை காட்டுவதில்லை.

அரசு போக்குவரத்து கழகமும் ரயில் நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி பேருந்துகளை இயக்குவதற்கு முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே நிலவுகிறது. இதனைத் தவிர்க்க ராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்து செல்லும் பயணிகளின் நலன் மற்றும் வசதி கருதியும், பொருளாதார நிலை கருதியும் ரயில் வரும் மற்றும் புறப்படும் நேரங்களுக்கு தகுந்தவாறு கூடுதல் பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Rameshwaram ,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...