×

நல்ல மழை பெய்தும் மகசூலும் குறைவு விலையும் சரிவு விரக்தியில் விவசாயிகள்

திருவாடானை, ஜன.13: திருவாடானை தாலுகாவில் நெல் மகசூல் குறைந்து விலையும் சரிவு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். திருவாடானை தாலுகா மாவட்டத்தின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுகிறது. மாவட்டத்திலேயே அதிக அளவாக 26 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.தற்போது முழு விளைச்சல் ஏற்பட்டு அறுவடையும் துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாமல் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அதிகளவு மழை பெய்தது. இதனால் முழு விளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே மகிழ்ச்சியில் விவசாயிகள் அறுவடையை துவங்கினர். அறுவடை துவங்கியதும் நெல் மகசூல் கடந்த ஆண்டுகளை விட பாதியாக குறைந்து விட்டது. அதேபோல் விலையும் வீழ்ச்சி அடைந்து விட்டதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.இதுகுறித்து திருவாடானை சுற்றுவட்டார விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நெல் விவசாயம் பருவமழை இல்லாமல் பாதிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்துள்ளது.இதனால் நெல் விவசாயம் கைகொடுக்கும் என நம்பி இருந்தோம். ஆனால் மகசூல் மிகவும் பாதியாக குறைந்து போய் விட்டது. நெல் விலையும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மூட்டை நெல் 60 கிலோ அறுவடையின்போது ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது.ஆனால் தற்போது ரூ.800க்கு கொள்முதல் செய்கின்றனர். விலையும் குறைந்து, மகசூலும் குறைந்து விட்டது.
இதனால் நல்ல மழை பெய்து முழு விளைச்சல் ஏற்பட்டும் பயனில்லாமல் போய் விட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்திற்கு ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்தோம்.தற்போது ரூ.1,600 கொடுக்கிறோம். இந்நிலையில் நெல் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இந்த பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை அரசு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை