×

தண்ணீர் இல்லாத நீர்த்தேக்க தொட்டிகளில் கிருமி நாசினி குழாய் வீணடிக்கப்படும் அரசு பணம்

சாயல்குடி, ஜன.3:  மாவட்டத்தில் குடிநீர்த்தேக்க தொட்டிகளில் கிரிமி நாசினி மருந்து ஏற்றும் குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தண்ணீரே வராத பழைய தொட்டிகளுக்கும் அமைப்பதால் அரசு பணம் விரயமாவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், போகலூர், நயினார்கோயில், பரமக்குடி, கடலாடி, முதுகுளத்தூர், கமுதி ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் 429 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல குடிநீர் திட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு, அனைத்தும் முறையாக செயல்படாததால் முடங்கி கிடக்கிறது.

முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 296 கிராமங்களுக்காக கடந்த 1998-99ம் ஆண்டுகளில் சுமார் ரூ.45 கோடி மதிப்பீட்டில் நரிப்பையூர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது முடங்கி கிடக்கிறது. 2010 ஆண்டு முதல் ரூ. 616 கோடி மதிப்பீட்டில் காவிரி-ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக முதுகுளத்தூர் தொகுதி உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்கள் தோறும் ஆயிரக்கணக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. நரிப்பையூர் குடிநீர் திட்டம் அரசு நிர்வாக காரணங்களால் கட்நத 12 வருடங்களாக தொடர்ந்து செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. ஆனால் தற்போது செயல்பட்டு வரும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலம் நேரடியாக சென்று வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சியால், குடிநீர் உற்பத்தி குறைவு, முறையான பராமரிப்பின்மை காரணமாக கிராமங்களுக்கு செல்வது தடைபட்டது.

இதனால் கிராமங்களிலும் நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது. உள்ளூர் நீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் தண்ணீர் மட்டுமே ஏற்றப்பட்டு வந்தது. இதனால் மாவட்ட முழுவதும் ஆயிரக்கணக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கீழ் நீர்த்தேக்க தொட்டிகள் பயன்படாமல் கிடக்கிறது. பெரும்பான்மையான தொட்டிகள் சேதமடைந்து கிடக்கிறது. நீர்த்தேக்க தொட்டியிலிருந்து கிராமத்தின் தெருக்களுக்கு இணைக்கப்பட்ட குழாய்களும் சேதமடைந்து கிடக்கிறது.
இந்தாண்டு நல்ல மழை பெய்து கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகள் பெருகி கிடந்தாலும் கூட, கிராமங்களில் குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது, இதனால் குடி தண்ணீரின்றி சாலையோரம் செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து கசியும் தண்ணீரையும், கிணறு போன்ற உள்ளூர் நீர்ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரை குடங்களில் சேகரித்து தள்ளுவண்டியில் வைத்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாயத்துகளில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் கிரிமி நாசியான குளோரின் மருந்து தெளிப்பது வழக்கம். இதற்காக ஆப்ரேட்டர்கள் தொட்டியில் ஏறி மருந்தினை தெளித்து வந்தனர். தற்போது தொட்டிக்கு தண்ணீர் ஏறும் குழாயில் குளோரினேசம் முறையில் கிரிமி நாசி மருந்து கலந்து தொட்டிக்கு தண்ணீர் செல்ல குழாயுடன் கூடிய உள்கட்டமைப்பு வசதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியினை புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக பஞ்சாயத்து நிதியை வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் உள்ள பயன்படாத சேதமடைந்த தொட்டிகள் உள்ளிட்ட அனைத்து தொட்டிகளிலும் இக்குழாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பயன்பாட்டில் இல்லாத தொட்டிக்கும் குழாய் அமைத்து அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருவதாக கிராமமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, அனைத்து கிராமங்களிலும் இரண்டிற்கும் மேற்பட்ட குடிநீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. பெரும்பாலான தொட்டிகள் தண்ணீரின்றி சேதமடைந்து கிடக்கிறது. இந்த தொட்டிகளில் கிரிமி நாசினி மருந்து ஏற்றும் முறை குழாய் அமைத்து வருகின்றனர். பெரும்பாலான பஞ்சாயத்துகளில் போதி நிதி இல்லை என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். நிதியில்லாத நிலையில் குழாய் அமைக்கும் பணிக்கு நிதி அளித்தால் அரசு பணம் விரயமாகும். எனவே தற்போது  பயன்பாட்டில் உள்ள தொட்டிகளில் மட்டுமே இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், இத்திட்டம் பயனுள்ள திட்டமா என ஆராய்ந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : reservoirs ,
× RELATED கோடையில் குடிநீருக்கு சிக்கல் இல்லை...