×

வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வதியின்றி அவதிப்பட்ட ஊழியர்கள்

சாயல்குடி, டிச. 29: ராமநாதபுரம்மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதாக கூறப்பட்டது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையே என புகார் எழுந்துள்ளதுமாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி முடிவடைந்தது. தேர்தலுக்கான பிரச்சாரம் டிச.25ல் முடிவடைந்தது. மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில்  90சதவீத வாக்குச்சாவடிகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டன. எஞ்சியவை ஊராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டன. இந்த வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின் சப்ளை, மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம், இடவசதி, கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து ஆய்வுப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன.


இந்நிலையில் தேர்தலுக்கு முன் அடிப்படை வசதிகள் செய்யும் பணி முடிவடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் ஏராளமான வாக்குச்சாவடிகளில் கழிவறைகள் பராமரிப்பின்றியும், தண்ணீர் வசதி இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் இல்லாமலும் இருந்தன. இதுபோல் தேர்தலுக்கு முதல் நாள் பணிக்கு சென்று நேற்று அதிகாலை வரை இருந்த ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு உணவு வழங்க போதிய நடவடிக்கை இல்லை. இதனால் ஏராளமானோர் பட்டினியோடு பணியாற்ற வேண்டிய நிலை இருந்தது.தேர்தல் பணிக்கு சென்ற அலுவலர்கள் கூறியதாவது:வாக்குச்சாவடிகள் அமைந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை பழமையான கட்டிடங்கள் ஆகும். இதில் காற்றோட்ட வசதி முற்றிலும் இல்லை. சிறிய அறைகளுக்குள் போதிய இடவசதியின்றி பணியாற்றினோம். கழிவறைகள் பராமரிப்பின்றியும் நீர் வசதி இல்லாமல் இருந்தன. தேர்தலுக்கு முன் எப்படி இருந்தனவோ அதே நிலையில் தான் இருந்தன. உணவு வழங்கக்கூட நடவடிக்கை இல்லை. «தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடிகள் பராமரிப்பு செய்யப்படுகின்றன என்பது கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது என்றனர்.

Tags : polling centers ,
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!