தேன்கனிக்கோட்டை, டிச.29: தேன்கனிக்கோட்டை உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானிகள் விருது பெற்று சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை சந்தைபேட்டை அருகே அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏஆர்எஸ் திட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில் மலை கிராமங்களில் பள்ளி இடைநின்ற, வசதியற்ற ஏழை எளிய மாணவ, மாணவிகள் 100 பேர் தங்கி படித்து வருகின்றனர். இங்கு 8ம் வகுப்பு பயிலும் மலை கிராம மாணவர்கள் ஜீவா, ராஜசேகர், மஞ்சு, வனிதா ஆகியோர் மாவட்ட அளவில் நடைபெற்ற 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு இளம் விஞ்ஞானிகள் விருது பெற்றனர்.
இதில் ஜீவா, ராஜசேகர் ஆகியோர், மாநில அளவில் நடைபெற்ற 27வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் நீர் மாசுபாடு குறித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர். ஆய்வறிக்கைக்கு முதல் பரிசு பெற்று இளம் விஞ்ஞானிகள் விருது பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்களை தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, கெலமங்கலம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் கீதா, தொண்டு நிறுவன செயலாளர் சாம்சன்வெஸ்லி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.