×

ருசி, கமகம மணத்திற்காக மீண்டும் மண்பாண்டத்தை விரும்பும் இல்லத்தரசிகள்

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 18:  ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் பழமைக்கு திரும்பியதால், மண்பாண்டங்களின் விற்பனை விறுவிறுப்படைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் காலம் தொட்டும் நம் முன்னோர்கள் மண் பாத்திரங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி அதில் சமைத்து சாப்பிட்டு ஆரோக்கியத்தோடு வாழ்ந்து வந்தனர். காலம் மாற மாற நாகரீகம் என்ற போர்வையில் அலுமினியம், சில்வர், நான்ஸ்டிக் உள்ளிட்ட பாத்திரங்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு மண் பானை, சட்டி போன்றவற்றை புறக்கணித்து விட்டு மாற்று உலோக பாத்திரங்களுக்கு மாறினர். இதனால் நோய் அதிகரித்தது தான் மிச்சம். மண் பாத்திரங்களை உபயோகப்படுத்துவோர் ஏழையாகவும், மற்ற அலுமினியம் “சில்வர், பித்தளை போன்ற பாத்திரங்களை பயன்படுத்துபவர்கள் பணக்காரர்களாகவும் தனக்கு தானே நினைத்து கொண்டனர். தற்போது மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் தான் நல்லது என்ற நிலை பொதுவாகவே பரவத் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்களை வாங்கி உபயோகப்படுத்த முன்வந்துள்ளனர். இதனால் ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மண்பாண்ட விற்பனை வேகமடைந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வினோத் கூறுகையில், நாங்கள் எல்லாம் சிறு வயதில் மண் பாத்திரங்களில் தான் சமைத்து சாப்பிட்டோம். பானையில் சமைத்த சோறும் சரி, குழம்பும் சரி மிகவும் ருசியாக இருக்கும். மண்பானை சோறு மற்றும் தண்ணீர் அவ்வளவு வாசமாக இருககும். இந்த தொழில் செய்து பல்லாயிரக்கணக்காண பொதுமக்கள் பிழைப்பு நடத்தி வந்தனர். அவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மண் பாண்ட தொழிலே நலிவடைந்து விட்டது வேதனையான ஒன்றாகும். அலுமினிய, சில்வர் போன்ற பாத்திரங்களில் சமைத்து சாப்பிட்டால் அவ்வளவாக நல்லதாக இருக்காது. வேறு வழியில்லாமல் பிள்ளைகளின் விருப்பத்திற்காக அந்த உலோகங்களிலான பாத்திரங்களை வாங்கி சமைக்கும் கட்டாயத்திற்கு ஆளானது மிக வேதனைக்குரிய விஷயம். ஆனால் இப்போது பழமையை மறவாமல் மீண்டும் மண் பாத்திரங்களை வாங்கி சமையல் செய்யவும், குடிதண்ணீர் வைத்து குடிக்கவும் ஆரம்பித்து உள்ளோம். இதனால் நோய் நொடி இல்லாமல் வாழலாம். இதுபற்றி அரசு தான் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Housewives ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை… தீபாவளி...