×

பணிபுரியும் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணி பெண் போலீசார் வேண்டுகோள்

சாயல்குடி, டிச. 17: உள்ளாட்சி தேர்தலில் பெண் போலீசாருக்கு அவர்கள் பணி செய்யும் இடத்திலிருந்து அருகேயுள்ள வாக்குச்சாவடிகளில் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியிலும் ஆசிரியர், அரசு ஊழியர்கள், போலீசார் பணியாற்றுகின்றனர். இதில் சுமார் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் பெண் ஊழியர்கள் ஆவர். அரசு ஊழியர், ஆசிரியர், போலீசார் உள்ளிட்ட வாக்குச்சாவடியில் பணி செய்யும் ஊழியர்கள் அனைவரும் வாக்குப்பதிவிற்கு முதல் நாளே அவர்களுக்கான வாக்குச்சாவடிக்கு பணிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

2 நாட்கள் தங்க வேண்டிய இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இருப்பதில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பெண் ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் பெண் வாக்காளர் அதிகமுள்ள இடத்தில் பெண் ஊழியர்களை மட்டும் நியமித்தல், கர்ப்பிணி, மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கு பணி வழங்குவதை தவிர்த்தல், ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்தல், பெண் ஊழியர்களுக்கு அருகில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணி வழங்குதல் உள்ளிட்ட சில மாறுதல்கள் செய்யப்படும என தேர்தல் ஆணையம் அறிவிப்பு செய்தாலும் முறையாக நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் பெண் அரசு ஊழியர்களுக்கு பின்பற்றப்படும் விதிமுறைகள் அடிப்படையில் தங்களுக்கும் தேர்தல் பணி வழங்க வேண்டும். அருகாமை வாக்குச்சாடிகளில் தேர்தல் பணி வழங்கும் வகையில் விதிமுறைகள் உருவாக்க வேண்டும் என பெண் போலீசார் கோரியுள்ளனர். அவர்கள் கூறியதாவது,’வெளியிடங்களில் பணிக்கு செல்லும்போது பெண் போலீசாருக்கு அதிகமான பிரச்னைகள் ஏற்படுகிறது. தங்குமிடங்களில் கழிவறை உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகள் இருப்பதில்லை. இதனால் கடும் அவதியும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே பெண் போலீசாருக்கு நாங்கள் பணி செய்யும் இடத்தில் இருந்து அருகில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணி வழங்க வேண்டும் என்றனர்.

Tags : maid ,ballot areas ,area ,
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி