×

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் முதல் நாளில் ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல்

கந்தர்வகோட்டை, டிச.10: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தோ;தல் முதல் கட்டத்தில் இடம் பெற்றுள்ளது. வேட்பு மனுதாக்கல் தொடங்கிய முதல் நாளான நேற்று குளத்தூர் கிராம ஊராட்சிக்கு வார்டு எண் 4க்கு இந்திராணி என்பவர் மட்டும் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவி ஒன்றுக்கும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 14 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 36 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 267 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. மொத்தம் 65,011 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதில் ஆண்கள் 33,002 ம், பெண்கள் 32, 009 பேரும் அடங்குவர். 153 வாக்குபதிவு மையங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒற்றை வாக்குப்பதிவு மையங்கள் 39ம் இரட்டை வாக்குபதிவு மையங்கள் 114ம் செயல்படவுள்ளன.

நேற்று கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு சுமார் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை பெற்று சென்றுள்ளனர். ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர்கள் 1-14 தேர்தல் நடத்தும் அலுவலர் புதுக்கோட்டை கூட்டுறவு துணைபதிவாளர் ராஜேந்திரனிடம், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 36 பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் காமராஜ் தலைமையில் செயல்படும் உதவி தேர்தல் அலுவலர்கள் செந்தில்குமார், சுகுமார், அருள்பிரகாசம், பாலசுப்பிரமணியன், கணேசன் மற்றும் மயில்வாகனன் ஆகியோரிடம் தலா 6 ஊராட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 1-5 க்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர் குமரனிடமும், 6-10க்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திருவரங்குளம் வட்டார கல்வி அலுவலரிடமும், 11-14 க்கு போட்டியிடுபவர்கள் கந்தர்வகோட்டை வட்டார கல்வி அலுவலர் வெங்கடாசலத்திடம் மனுதாக்கல் செய்யவேண்டும்.

அனைவரும் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருப்பார்கள். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களிடம் மனு தாக்கல் செய்யவேண்டும். மனுதாக்கல் செய்யப்படும் விண்ணப்பம் ரூ.1க்கு வேட்பாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. வேட்பு மனுதாக்கலை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு செல்லும் முக்கத்தில் காவல் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சோதனைப்பிறகு அனைவரையும் அனுப்பி வைக்கின்றனர், போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags : candidate ,Kandarwakottai Panchayat Union ,
× RELATED களைகட்டிய பொங்கல் பாரம்பரியம் பெண்...