×

நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சிசிடிவி கேமரா பதிவில் மர்ம நபர்கள் சிக்கினர் போலீசார் தீவிர விசாரணை

ராமேஸ்வரம், நவ. 29:  ராமேஸ்வரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்கச்செயினை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பிச்சென்ற நபர்களின் கேமரா பதிவு வெளியாகியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் தம்பியான்கொல்லை பகுதியை சேர்ந்த குமார் மனைவி நாகலெட்சுமி (30) என்பவர் கடந்த 26ம் தேதி தங்கச்சிமடம் காட்டுமாரியம்மன் கோயில் பகுதியில் வசிக்கும் சித்தி வீட்டிற்கு சென்றவர் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு திரும்பினார். தங்கச்சிமடம் சந்தியாகப்பர் கோயில் சாலையில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் நாகலெட்சுமியின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர். தடுக்க முயன்ற நாகலெட்சுமியின் கையிலும் கத்தியினால் குத்திவிட்டு மோட்டார் பைக்கில் இருவரும் தப்பிவிட்டனர்.
 செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தும், இன்னொருவர் ஹெல்மட் போடாமலும் வந்தனர். நடந்த சம்பவம் சம்பவம் குறித்து தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் நாகலெட்சுமி புகார் செய்தார். தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தங்கச்சிமடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் மோட்டார் பைக்கில் தப்பிச்சென்றபோது அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பதிவு எண் இல்லாத மோட்டார் பைக்கில் பெரியகட்டம் போட்ட சட்டை மற்றும் ஹெல்மெட் அணிந்தவர் பைக்கை ஓட்டியபடியும், நீலநிற ஜீன்ஸ் பேன்ட், கரும்பச்சை நிறத்தில் சட்டை அணிந்தவர் பின்னால் அமர்ந்து செல்லும் காட்சிகள் தெளிவாக கேமராவில் பதிவாகியுள்ளது. பைக்கில் பின்னால் அமர்ந்து இருப்பவரின் முகம் தெளிவாக பதிவாகி இருப்பதால் யார் என்று அடையாளம் கானமுடியும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கேமரா பதிவு கிடைத்ததை தொடர்ந்து தங்கச்சிமடம் போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நகை பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : persons ,CCTV ,jeweler ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...