×

சாயல்குடியில் சாலையில் சரியும் கண்மாய்கரை மண் தடுப்புச்சுவர் கட்ட வலியுறுத்தல்

சாயல்குடி, நவ.26: கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கக்கூடிய கண்மாய், ஊரணிக்கரைகளின் மண் மழைக்கு சரிந்து சாலையில் விழுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.சாயல்குடி வழியாக ராமநாதபுரம் செல்ல கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. கடந்தாண்டு இச்சாலையில் மராமத்துடன் கூடிய புதிய சாலை அமைக்கும் பணி முடிவுற்றது. பெயரளவிற்கு நடைபெற்ற சாலை வேலைகள் முறையாக நடைபெறவில்லை என புகார் எழுந்தது. சாலையின் இருபுறமும் கிராவல்மண் போடாததாலும், நீர்நிலை ஓரங்களில் தடுப்புச்சுவர் கட்டாததாலும் மண் அரிமானம் ஏற்படுகிறது. சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் சாயல்குடி பெரிய கண்மாய், கூரான்கோட்டை விலக்கு கண்மாய், கடலாடி அருகே கீழச்செல்வனூர்  கண்மாய், ஊரணி, இதம்பாடல் கண்மாய்  ஆகியவை பிரதான சாலையின் ஓரங்களில் அமைந்துள்ளன.  
இந்த நீர்நிலை கரைகளின் மண் சரிந்து சாலையில் சிதறி வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால் மண் சரிந்து விழுந்து சேறும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்கள் விபத்துகளை சந்தித்து வருகின்றன.மேலும் சாலையோரம் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதுபோன்று பல்வேறு இடையூறுகளை செய்து வரும் சாலையோரம் இருக்கும் சீமைகருவேல மரங்களையும் அகற்ற வேண்டும். நீர்நிலையோரங்களில் புதியதாக தடுப்புச்சுவர் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Saiyalgudi ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை