×

முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சிகளில் காட்சி பொருளாக நிற்கும் ஆர்.ஓ. பிளான்ட்கள்

சாயல்குடி, நவ. 8: முதுகுளத்தூர், கடலாடி ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள உப்பு தண்ணீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் போதிய பராமரிப்பின்றி காட்சி பொருளாக நிற்கிறது. முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 48 பஞ்சாயத்துகளும், கடலாடி ஒன்றியத்தில் 60 பஞ்சாயத்துகளும் உள்ளன. இரண்டு ஒன்றியத்திலும் உள்ள பஞ்சாயத்துகளில் 30க்கும் மேற்பட்ட உப்பு நீரை நன்னீராக்கும் திட்ட பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக சுமார் ரூ.8 லட்சம் முதல் 10 லட்சம் மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் போதிய பராமரிப்பின்றி காட்சி பொருளாக இருப்பதால், இயந்திரங்கள் செயல்படாமல் சேதமடைந்து கிடக்கிறது. கிராமங்களுக்கு தடையின்றி காவிரி கூட்டு குடிநீர்தான் கிடைக்கவில்லை. உப்புத்தண்ணீருக்கும் தட்டுப்பாடு வந்து விட்டது என கிராமமக்கள் வேதனையடைந்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, கிராம ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி தலைமையிடத்தில் ஆர்.ஓ. பிளான்ட்கள் அமைக்கப்பட்டது. இதற்காக சுமார் 100 அடி ஆழத்திற்கு மேல் ஆழ்துளை கிணறு அமைத்து, உப்பு தண்ணீரை நல்ல தண்ணீராக்கும் நவீன இயந்திரங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு நல்ல தண்ணீர் வழங்கப்பட்டது.

ஆனால் கடலாடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து காணப்படுவதால் 100 அடிக்கும் குறைவாக தோண்டப்பட்ட பெரும்பாலான ஆழ்துளை கிணறுகளில் போதிய தண்ணீர் வருவதில்லை. இதனால் மோட்டார் வேகத்திற்கேற்றவாறு தண்ணீர் சப்ளை கிடைப்பதில்லை. மேலும் ஆர்.ஓ பிளான்ட்டில் உள்ள பில்டர்களை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இயந்திரங்களையும் பராமரிக்க வேண்டும். ஆனால் இப்பகுதி ஆப்ரேட்டர்களுக்கு பராமரிக்க தெரியவில்லை. இது போன்ற காரணங்களால் பெரும்பாலான ஆர்.ஓ., பிளான்ட்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் கிராமங்களுக்கு எந்தவொரு குடிநீர் திட்ட தண்ணீரும் கிடைக்காமல் டிராக்டர்களில் விற்கப்படும் தண்ணீரை, கடும் வறுமை சூழலிலும் வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது பெய்த மழைக்கு ஊரணிகள் பெருகியுள்ளது. இதனால் குழிப்பதற்கு, துணிகள் சலவை செய்வதற்கு பிரச்சனை இல்லை. கிராமத்தில் திறந்தவெளி கிணறு மற்றும் குடிநீர் ஊரணிகளில் உள்ள தண்ணீரை குடிக்க, கால்நடைக்கும் பயன்படுத்தி வருகிறோம். இது தற்காலிக தீர்வாக உள்ளது. ஆனால் மூன்று மாதங்கள் கடந்து கோடை காலம் வந்தால் மீண்டும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடும். எனவே கிராமத்தில் செயல்படாமல் கிடக்கும் ஆழ்துளை கிணறு மற்றும் ஆர்.ஓ பிளாண்ட்களை சீரமைத்து வைக்க வேண்டும் என கூறுகின்றனர். ஊராட்சி தண்ணீர் திறப்பாளர் ஒருவர் கூறும்போது, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் ஆழ்துளை கிணறுகளில் ஆர்.ஓ பிளான்ட்க்கு தேவைப்படும் தண்ணீர் கிடைப்பதில்லை. சுத்திகரிப்பு தண்ணீர் வாங்க வரும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து, அதனை கொண்டு பராமரிப்பு செய்ய யூனியன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் போதிய வருமானம் மற்றும் போதிய நிதியின்றி பில்டர்களை கூட மாற்ற முடியவில்லை. இது போன்ற காரணங்களால் இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியவில்லை என்றார்.

Tags : Mudukulathur ,
× RELATED கடலாடி, முதுகுளத்தூர் கிராமங்களில்...